நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தலைமைக்கு ஆட்சேபனை இல்லை


நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தலைமைக்கு ஆட்சேபனை இல்லை
x
தினத்தந்தி 16 July 2018 4:55 AM IST (Updated: 16 July 2018 4:55 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தலைமைக்கு எனது ஆட்சேபனை ஏதும் இல்லை என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு,

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா நேற்று ரெயில் மூலம் உப்பள்ளிக்கு வந்தார். ரெயில் நிலையத்தில் அவருக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்காக எங்கள் கட்சியை பலப்படுத்த நான் உப்பள்ளி வந்துள்ளேன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வட கர்நாடகத்தில் எங்கள் கட்சி பின்னடைவை சந்தித்தது. குமாரசாமி முதல்–மந்திரியாக இருப்பதால், கட்சி பணிகளை அவரால் கவனிக்க முடியவில்லை. அதனால் நான் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்.

3–வது அணி இன்னும் உருவாகவில்லை. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் பெங்களூருவில் ஒன்று சேர்ந்தன. நாட்டின் பல மாநிலங்களில் மாநில கட்சிகள் பலமாக இருக்கின்றன. சில மாநிலங்களில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சில கட்சிகள் கூட்டணி அமைக்கலாம். அந்த தேர்தலுக்கு பிறகும் பல கட்சிகள் ஒன்று சேரலாம்.

எனது கட்சியை காப்பாற்றுவது தான் எனது நோக்கம். சட்டசபை தேர்தலில் சில மாவட்டங்களில் எங்கள் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. உள்ளாட்சி அமைப்புகளில் எங்கள் கட்சியை வெற்றிபெற வைக்க வேண்டியுள்ளது. இந்த நோக்கத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகமாக உழைக்க வேண்டும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தலைமைக்கு எனது ஆட்சேபனை ஏதும் இல்லை.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டில் வட கர்நாடகத்திற்கு எந்த பாரபட்சமும் ஏற்படவில்லை. எனது ஆட்சி காலத்தில் வட கர்நாடகத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு வட கர்நாடகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்த புள்ளிவிவரங்களை தயாரித்து வெளியிடுவேன்.

1965–ம் ஆண்டுக்கு பிறகு வட கர்நாடகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்ட என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு முதல்–மந்திரியிடம் வலியுறுத்துவேன். இந்த விவரங்களை குமாரசாமி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். விவசாய கடன்களை குமாரசாமி தள்ளுபடி செய்துள்ளார். மாநில மக்களின் நலனுக்காக அவர் பகல்–இரவாக உழைத்து வருகிறார். பிரதமர் மோடியின் ஆட்சி காலம் இன்னும் 6 மாதங்கள் உள்ளது. அடுத்து மக்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story