தந்தையை தாக்கி பெண்ணிடம் நகை-பணம் பறிப்பு


தந்தையை தாக்கி பெண்ணிடம் நகை-பணம் பறிப்பு
x
தினத்தந்தி 17 July 2018 3:15 AM IST (Updated: 16 July 2018 11:52 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே தந்தையை தாக்கி பெண்ணிடம் நகை-பணத்தை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவரது மகள் உதயா(24). இவருக்கு திருமணமாகி சென்னையில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது மகளை அழைத்து வருவதற்காக முருகன் சென்னைக்கு சென்றிருந்தார். பின்னர் உதயாவும், முருகனும் சென்னையில் இருந்து பஸ் ஏறி உளுந்தூர்பேட்டைக்கு வந்தனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் பஸ் வந்ததும், அவர்கள் இருவரும் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

சிறிது தூரம் நடந்து சென்ற போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் இவர்களுக்கு முன்பு சென்று மோட்டார் சைக் கிளை நிறுத்தினார். மேலும் முருகனை கையால் தாக்கிய அவர், உதயாவிடம் இருந்த கைப்பையை பறித்துக் கொண்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

இதில் அதிர்ச்சியடைந்த உதயா திருடன், திருடன் என சத்தம் போட்டார். உடனே அங்கிருந்தவர்கள் அந்த மர்மநபரை விரட்டிச்சென்றனர். இருப்பினும் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். அந்த கைப்பையில் 5 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இதுபற்றி உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் உடனே சென்னை-திருச்சி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உளுந்தூர்பேட்டை நகர் காலனியை சேர்ந்த குப்புசாமி மகன் சின்னராசு(24) என்பதும், முருகனை தாக்கிவிட்டு அவரது மகள் உதயாவின் கைப்பையை பறித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சின்னராசுவை போலீசார் கைது செய்து, நகை -பணம் இருந்த கைப்பையை மீட்டனர். 

Next Story