திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி பயன்பாட்டுக்கு வந்தது


திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி பயன்பாட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 16 July 2018 11:00 PM GMT (Updated: 16 July 2018 6:36 PM GMT)

முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

திருச்சி,

மிகவும் பழமையான-அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. ரூ.81 கோடி திட்ட மதிப்பீட்டில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.

இதில் முதல்கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளன. சென்னை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவ நிலம் ஒப்படைக்கப்படாததால் அந்த பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

முதல்கட்ட பணியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள ஒரு பகுதியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அவர் திறந்து வைத்ததாக அறிவிக்கப்பட்டதும், இந்த பாலத்தின் கிராப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கலெக்டர் ராஜாமணி, ப.குமார் எம்.பி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

அந்த சாலை வழியாக சென்ற முதல் டவுன் பஸ்சையும் இயக்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்ல தொடங்கின.

முதல்-அமைச்சர் திறந்து வைத்துள்ள இந்த பாலத்தில், தற்போது மதுரை சாலையில் கிராப்பட்டி பகுதியில் இருந்து வாகனங்கள் ஏறி மத்திய பஸ் நிலையம், திண்டுக்கல் சாலை கருமண்டபம், ஜங்ஷன் ரெயில் நிலையம் ஆகிய வழித்தடங்களில் இறங்க முடியும்.

மத்திய பஸ் நிலையம் பகுதியில் இருந்தோ, ஜங்ஷன் பகுதியில் இருந்தோ, கருமண்டபம் பகுதியில் இருந்தோ பாலத்தில் ஏற முடியாது. இரண்டாம் கட்ட பாலம் கட்டுமான பணிகள் தொடங்கும் வரை இப்போது திறக்கப்பட்ட பாலம் ஒரு வழிப்பாதையாக மட்டுமே பயன்படுத்தப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story