வாக்காளர்களின் தகவல்களை வேறு யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாது


வாக்காளர்களின் தகவல்களை வேறு யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாது
x
தினத்தந்தி 17 July 2018 4:45 AM IST (Updated: 17 July 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களின் தகவல்களை வேறு யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாத வகையில் பாதுகாக்கப்படுகிறது என்று கோவையில் நடந்த பயிற்சி முகாமில் இந்திய தேர்தல் ஆணைய துணை ஆணையாளர் சந்தீப் சக்சேனா கூறினார்.

கோவை,

தென் மண்டல அளவிலான இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் இந்திய தேர்தல் ஆணையத் தின் சார்பில் கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. முகாமிற்கு இந்திய தேர்தல் ஆணைய துணை ஆணையாளர் சந்தீப் சக்சேனா தலைமை தாங்கி பேசியதாவது:–

நாட்டில் அனைத்து துறைகளும் முழு கணினிமயமாக்கலை நோக்கி நகரும் இந்த சூழலில் பல்வேறு புதுமைகளையும், சிறப்பு முயற்சிகளையும் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, புதிய வாக்காளர் பதிவு செய்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், திருத்தல், முகவரி மாற்றம், வாக்காளர் புகைப்பட பதிவேற்றம் என பல்வேறு பணிகள் இணையதளம் வாயிலாக வாக்காளர்களே மேற்கொள்ளும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் ஆணையத்தால் இணையத்தில் பதிவேற்றப்பட்ட எந்தவொரு வாக்காளர்களின் தகவல்களையும் வேறு யாராலும் பதிவிறக்கம் செய்ய முடியாது. மேலும் அந்த தகவல்களை வேறு எவரும் பகிர இயலாத வகையில் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. தேர்தல் தொடர்பான இனங்களில் இணையப் பயன்பாடு, மென்பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த சூழலில் இணையதள மற்றும் முழு கணினிமயமாக்கப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக கையாள்வது அவசியமாகும்.

தற்போதுள்ள இணைய வளர்ச்சிக்கேற்றவாறு தேர்தல் அலுவலர்கள் அனைவரும் போதிய கணினி அறிவும், இணைய அறிவும் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், இணைய பயன்பாட்டின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் அலுவலர்களிடையே விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இணைய பயன்பாட்டில் பாதுகாப்பு சட்டநடைமுறைகள் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் இணைய பயன்பாட்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் தேர்ந்த வல்லுனர்கள் மூலம் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, புதுச்சேரி உள்பட 8 மாநில தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் என 150 பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தென்மண்டல அளவிலான வாக்காளர் அலுவலர்களுக்கு தமிழ்நாடு முதன்மை தேர்தல் அலுவலர் சத்தியபிரதாசா, குஜராத் மாநில முதன்மை தேர்தல் அலுவலர் முரளிகிருஷ்ணா, இந்திய தேர்தல் ஆணைய தகவல் தொழில்நுட்ப இயக்குனர் குசால்குமார் பாதக் ஆகியோர் இணைய பாதுகாப்பு பயிற்சி அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஹரிஹரன் உள்பட 8 மாநிலங்களை சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story