தென்மேற்கு பருவமழை தீவிரம்: கோவையில் குளங்கள் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் கோவையில் குளங்கள் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக கோவையில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள குளங்கள் மட்டுமல்லாமல் கோவையை சுற்றி உள்ள குளங்களுக்கும் நீர் வரத்து உயர்ந்துள்ளது. மேலும் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மழை காரணமாக புதுக்குளம் நிரம்பி வழிகிறது. கிருஷ்ணாம்பதி, கொலராம்பதி ஆகிய குளங்களும் நிரம்பி விட்டன. சொட்டையாண்டி குட்டை, கொலராம்பதி குளம், உக்கடம் குளம், வாலாங்குளம், நரசாம்பதி குளம், கங்கநாராயண சமுத்திர குளம், பேரூர் பெரியகுளம், செங்குளம் ஆகிய குளங்கள் 60 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பி உள்ளன. இதனால் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது போல் நண்டங்கரை, முண்டந்துறை தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.
கோவையை அடுத்த துடியலூர், கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ், தொப்பம்பட்டி, கணுவாய், இடையர்பாளையம், பன்னிமடை, சின்னதடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் இருந்து மாலை வரை லேசான மழை விட்டு விட்டு பெய்தது. மாங்கரை, சின்னதடாகம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். மழையின் காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை மற்றும் துடியலூர்–சரவணம்பட்டி செல்லும் சாலையில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நின்றது.
பேரூர் மற்றும் நாகராஜபுரம் இணைப்பு சாலை கனமழை காரணமாக பலத்த சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். வடவள்ளியில் உள்ள லட்சுமிநகர் குளம் இன்னும் நிரம்பவில்லை. மருதமலையில் கன்னிமார் கோவிலின் பின்புறம் உள்ள சுனையில் நீர் அதிக அளவில் வருகிறது. மருதமலையின் பின்புறம் வனப்பகுதியில் யானைமடுவு தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கீழ் சித்திரைச்சாவடி வாய்க்காலில் ஏராளமான இளைஞர்கள் துணியை விரித்து மீன்களை ஆர்வமாக பிடித்தனர்.
பலத்த மழை காரணமாக கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் சாலையில் மரங்கள் விழுந்தன. இதனால் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்த கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
மேலும் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியிலும் அடிவாரத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்து மின் இணைப்பு துண்டானது. மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டதால் சிறுவாணி அணையின் நீர்மட்ட அளவை கூட பெற முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் மின்சார வினியோகம் இல்லை. இதனால் சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் விளக்குகள் தான் அணைக்கட்டு அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் கடந்த சில நாட்களாக கருமேகங்கள் சூழ்ந்து உள்ளதால் சூரிய ஒளி சக்தி மூலம் செயல்படும் விளக்குகளும் செயல்படவில்லை. இதனால் அங்குள்ள பணியாளர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் நேற்றுக்காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:–
பொள்ளாச்சி–17, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்–3.20, சின்கோனா–130, சின்ன கல்லாறு–188, வால்பாறை பி.ஏ.பி.–108, வால்பாறை தாலுகா–112.
பருவமழை குறித்து கோவை விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது:–
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்து வருகிறது. இதனால் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பும் நிலை உள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. வெங்காயம், மஞ்சள், காய்கறி பயிர் விளைச்சலுக்கு தற்போது பெய்து வரும் மழை மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். நொய்யல் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அப்படி செய்தால் நீர்வரத்து அதிகரிக்கும். கோவையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை– வேடப்பட்டி சாலையில் தென்னை மரம் விழுந்து மின்சார கம்பம் முறிந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.