கோவை போத்தனூரில் ரூ.32 கோடி செலவில் புதிய ரெயில்வே மேம்பாலம், முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்
கோவை போத்தனூரில் ரூ.32 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை காணொலி காட்சி மூலம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
போத்தனூர்,
கோவை போத்தனூரில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ரூ.31 கோடியே 93 லட்சம் செலவில் போத்தனூர்–செட்டிப்பாளையம் ரெயில் நிலையங்களுக்கு இடையில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து விடப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை போத்தனூர் ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
கோவை போத்தனூரில் நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஹரிகரன், போலீஸ் கமிஷனர் பெரியய்யா, எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ரெயில்வே மேம்பாலம் திறந்ததையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், பகுதி செயலாளர் எம்.பெருமாள்சாமி மற்றும் ஆர்.பாலகிருஷ்ணன், கே.என்.செந்தில்குமார், கேபிள்பாபு, எஸ்.கே.நிஜாம், ஏ.ரபீக், வி.வேணுகோபால், எச்.எஸ்.பாவா, சற்குரு, ஜெயக்குமார், வி.வேணுகானம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆர்.சந்திரசேகர், மாவட்ட மாணவர் அணி அவைத்தலைவர் ஆர்.சுரேஷ், கே.ஜி.ஜெயகாந்தன், வெள்ளலூர் பேரூராட்சி செயலாளர் மருதாசலம், செட்டிப்பாளையம் பேரூராட்சி செயலாளர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டதால் போத்தனூர், வெள்ளலூர், மேட்டூர், கோணவாய்க்கால் பாளையம், குறிச்சி மற்றும் செட்டிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகவும் பயன் அடைவார்கள். இருவழிப்பாதை உள்ள இந்த மேம்பாலம் வடக்கு கோவை–போத்தனூர் செட்டிப்பாளையம் சாலையில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:–
இந்த பாலம் திறக்கப்பட்டு உள்ளதால் கிராம மக்கள் தங்களின் வேளாண் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும், அன்றாட தேவைகளுக்கு தாமதமின்றி அருகில் உள்ள நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வர முடியும். இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காலதாமதமின்றி சென்று வரவும் இந்த பாலம் உதவியாக இருக்கும். இது இந்த பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.