பருவ மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை


பருவ மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 July 2018 3:30 AM IST (Updated: 17 July 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

பருவ மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேட்டுப்பாளையம்,

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு, அடர்ந்த வனப்பகுதி வழியாக கேரளாவுக்குள் செல்கிறது. பின்னர் அங்கிருந்து வனப்பகுதி வழியாக மீண்டும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அத்திக்கடவு என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது. இங்கு பவானி ஆற்றின் குறுக்கே பில்லூர் அணை கட்டப்பட்டு உள்ளது.

100 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் கடந்த 10–ந் தேதி 92 அடியாக இருந்தது. அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 97 அடியை எட்டியது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் ஆற்றுக்கு திறக்கப்பட்டது.

இதனால் பவானி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழைக்கு ஏற்றவாறு பில்லூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 96½ அடியாக இருந்தது. இதனால் அணையில் உள்ள 4 ‌ஷட்டர்களில், ஒரு ‌ஷட்டரில் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. இதையடுத்து மீண்டும் அணையில் இருந்து 4 ‌ஷட்டர்கள் வழியாக 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் நேற்று மதியம் 2 மணிக்கு அணைக்கு வரும் நீரின் அளவு 22 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி செந்நிறத்தில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது.

இதன் காரணமாக ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றங் கரையோரத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. கோவிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

பவானி ஆற்றில் செல்லும் வெள்ளம் அனைத்தும் பவானி சாகர் அணைக்கு செல்வதால், அந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதையடுத்து அணையின் பின்பகுதியில் உள்ள சிறுமுகை அருகே லிங்காபுரம் அடுத்துள்ள காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்துக்கு அடியில் தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. இதே தண்ணீர் தொடர்ந்து அணைக்கு வந்தால் நீர்மட்டம் வேகமாக உயரும் என்பதால், இந்த பாலம் மூழ்கும் அபாய நிலை ஏற்படும்.

அதுபோன்று பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஏராளமான வாழைதோப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பெரும்பாலான வாழைகள் தண்ணீரில் மூழ்கியும், ஆயிரக்கணக்கான வாழைகள் பாதியளவு தண்ணீரில் மூழ்கியும் காணப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மேட்டுப்பாளையம் தாசில்தார் புனிதா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பவானி ஆற்றின் கரையோர பகுதியான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், ஆலாங்கோம்பு, சிறுமுகை பகுதிகளுக்கு ஆற்றில் செல்லும் தண்ணீரை பார்வையிட்டார். அத்துடன் ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் பவானி ஆற்றில் செல்லும் வெள்ளம் குறித்து மேட்டுப்பாளையம் பகுதியில் தண்டோரா மூலமும், ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அதுபோன்று பொதுப்பணித்துறை பாசன பிரிவு உதவி பொறியாளர் பொங்கியண்ணன் மேற்பார்வை யில் ஊழியர்கள் தேக்கம்பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பில்லூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு சற்று குறைந்து 20 ஆயிரம் கனஅடியாக காணப்பட்டது.

இதன் காரணமாக அணையில் இருந்து ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 97 அடியாக உள்ளது.

இதற்கிடையே கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம். அத்துடன் ஆற்றில் தங்களின் கால்நடைகளை குளிப்பாட்டவும் வேண்டாம். மேலும் ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story