ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய பொதுமக்கள்


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 July 2018 4:00 AM IST (Updated: 17 July 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

காமராஜர் பிறந்தநாளையொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர் கொண்டு வந்து வழங்கினர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் ஊரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான சில்வர் பாத்திரங்கள், பர்னிச்சர் வகைகள், பேக், பிளாஸ்டிக் பொருட்கள், போன்ற பலவகையான பொருட்களை கல்வி சீராக ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியை தாரகேஸ்வரியிடம் கல்வி சீர்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதில் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், உருவம்பட்டி, ஊராப்பட்டி போன்ற ஊர்களில் காமராஜரின் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவில் காமராஜரின் வரலாறு, திட்டங்கள், சாதனைகள் கல்விக்கு அவர் ஆற்றிய பணிகள் பற்றி மாணவர்களிடம் எடுத்து கூறப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகள் வரிசையாக நின்று காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல ஆவூர் அருகே உள்ள மலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி தலைமையிலும், குமாரமங்கலம் ஊராட்சி இச்சிக்காமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் சவரிமுத்து தலைமையிலும், ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் பீர்ஜான் தலைமையிலும் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்ததந்த பள்ளிகளில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல மாத்தூர், குன்னத்தூர், நாசரேத், மண்டையூர், மாங்குடி, அக்கல்நாயக்கன்பட்டி, நீர்பழனி, வேலூர், விளாப்பட்டி, பாக்குடி ஆகிய ஊர்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

Next Story