இருக்கன்குடி அணைக்கரையில் கோவில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
இருக்கன்குடி அணைக்கரையில் கோவில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
விருதுநகர்,
விருதுநகரில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தின்போது இருக்கன்குடி நத்தத்துப்பட்டி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
சாத்தூர் தாலுகாவில் உள்ள அயன்மேலமடை கிராமத்தில் இருக்கன்குடி அணைக்கரையில் சீலைக்காரி மற்றும் கருப்பசாமி சிலைக்கு நத்தத்துப்பட்டி ஊர் பொதுமக்களால் கோவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 3–ந்தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. நத்தத்துப்பட்டி கிராம மக்கள் அக்கோவிலை தினசரி வழிபாடு நடத்தி வந்தனர். அந்த கோவில் வளாகத்தை நத்தத்துப்பட்டியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதோடு நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித்துறைகளுக்கு சொந்தமான பகுதியில் 2 இரும்பு கதவுகள் போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இதில் உரிய நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு சென்று வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.