ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் சிக்கியவர் பரிதாப சாவு, உறவினர்கள் மறியல்
ராஜபாளையம் அருகே விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்வர தாமதம் ஆனதால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள செந்தட்டியாபுரத்தை சேர்ந்தவர் பரமன். கட்டிட தொழிலாளியான இவர் வழக்கம் போல, தனது இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவர் முதுகுடி அருகே வந்த போது, எதிரே ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சங்கரன் கோவிலுக்கு காய்கறி ஏற்றிச் சென்ற வேன் பரமன் மீது மோதி கீழே தள்ளியதுடன், வேனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீதும் மோதியுள்ளது.
இந்த விபத்தில் பரமன், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கணேசன், விழுப்புரத்தை சேர்ந்த மணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில்வேன் டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் வேன் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர்.
காயம் அடைந்தவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல, 108 ஆம்புலன்சை அழைத்துள்ளனர். ராஜபாளையத்தில் இருந்த 3 வாகனங்களும் வேறு உதவிக்காக சென்று விட்டதால், சங்கரன் கோவில் வாகனத்தை அனுப்பி வைப்பதாக 108 கட்டுப் பாட்டு அறையில் இருந்து கூறியதாக தெரிகிறது.
சங்கரன்கோவிலில் இருந்து ஆம்புலன்ஸ் வரும் முன்பே தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் பரமன் நிகழ்விடத்தில் உயிரிழந்தார். மற்ற இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவ மனையில் முதலுதவிக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப் பட்டனர்.
தப்பி ஓடிய வேன் டிரைவரை கைது செய்யக்கோரியும் அதிகமான மக்கள் தொகை உடைய ராஜபாளையத்திற்கு கூடுதலாக அவசர வாகனங்கள் தேவை என கோரியும் உயிரிழந்த பரமனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சங்கரன் கோவில் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வேன் டிரைவரை கைது செய்து, உயிரிழந்தவரின்குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்கும் வரை போராட்டத்தை கை விடமாட்டோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜபாளையம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.