இந்தியா முழுவதும் பட்டாசுக்கு தடை செய்ய கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு இன்று நல்ல தீர்ப்பு வழங்கும் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் எதிர்பார்ப்பு


இந்தியா முழுவதும் பட்டாசுக்கு தடை செய்ய கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு இன்று நல்ல தீர்ப்பு வழங்கும் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 17 July 2018 3:30 AM IST (Updated: 17 July 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு வெடிக்க இந்தியா முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டால் அது பட்டாசு தொழிலை பாதுகாக்கும் வகையில் இருக்கும் என்று உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் முழுவதும் 800–க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழில் மூலம் நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் வாழ்வாதாரம் பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்று கூறி பட்டாசு தொழிலை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று சிலர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குதாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டாசுக்கு எதிரான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருவதால் வட மாநிலங்களில் இருந்து சிவகாசிக்கு வந்து பட்டாசு வாங்கி செல்லும் மொத்த விற்பனையாளர்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு தேவையான பட்டாசுகளை வாங்க சிவகாசிக்கு வரவில்லை. வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கி ஜூன் மாதங்கள் வரை வெளி மாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து இங்குள்ள பட்டாசு ஆலைகளில் தங்களுக்கு தேவையான பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அதற்குரிய பணத்தையும் செலுத்திவிட்டு செல்வது வழக்கம். ஆனால் தற்போது பட்டாசுக்கு எதிரான வழக்கு கோ£ட்டில் நடைபெற்று வருவதால் தீர்ப்பு பாதகமாக வந்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று அச்சம் அவர்கள் மத்தியில் உள்ளது.

இந்தநிலையில் பட்டாசுக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று சமூக ஆர்வலர்களும், பட்டாசு உற்பத்தி யாளர்கள் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். இதில் 8 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் இந்த தொழிலை பாதுகாக்க உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை தான் வழங்கும் என்று மீனம்பட்டி சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தினத்திந்தி நிருபரிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:–

இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை கேட்டு சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் இன்று நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர் பார்க்கும். இந்த தீர்ப்புக்கு பின்னர் தான் பட்டாசு விற்பனை சூடுபிடிக்கும். தற்போது வரை இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசுகள் எதுவும் விற்பனையாகாமல் இருக்கிறது. மூலப்பொருள் விலை ஏறி உள்ளது. ஆனால் பட்டாசு விலை உயர்த்தப்படவில்லை. வழக்கமாக 5 சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது உண்டு. இந்த வருடம் இதுவரை பட்டாசு விற்பனை இல்லாததால் சம்பளம் உயர்வு தள்ளி வைக்கப் பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கி பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டால் தற்போது பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நீங்கும். வெளியூர் வியாபாரிகள் பட்டாசு வாங்க சிவகாசி வருவார்கள். அதை தொடர்ந்து விற்பனையும் எதிர்பார்த்தது போல் நடக்கும். இவ்வாறு நடக்கும் போது தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வு வழங்கப்படும். இவை அத்தனையும் நடக்க உச்சநீதிமன்றம் இன்று நல்ல தீர்ப்பு தரனும். இவ்வாறு அவர் கூறினார்.

தீர்ப்பு எப்படி இருக்கும் என்று பட்டாசு வியாபாரி சரவணக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

வழக்கமாக இது போன்ற காலக்கட்டங்களில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இருந்தும் சிறு வியாபாரிகள் சிவகாசிக்கு வந்து ஆர்டர் கொடுப்பது வழக்கம். ஆனால் தற்போது பட்டாசுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதால் பட்டாசு சிறுவியாபாரிகள் தீர்ப்புக்கு பின்னர் வரலாம் என்று நினைத்து இதுவரை வரவில்லை. நாங்கள் கடன் வாங்கி பல லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கிய பட்டாசுகள் கடைகளில் அப்படியே இருக்கிறது. ஆனால் அதற்கான வட்டியை மட்டும் சரியான முறையில் கொடுக்க வேண்டிய கட்டாயத் தில் நான் உள்ளேன். இந்த தொழில் தொடர்ந்து நடக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 லட்சம் மொத்த வியாபாரிகள் காக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தீர்ப்பு குறித்து சரக்கு லாரி சங்கத்தை சேர்ந்த அமர் கணேசன் கூறியதாவது:–

சிவகாசியில் 1000–க்கும் மேற்பட்ட லாரிகள் வெளியூர்களுக்கு சரக்கு களை கொண்டு செல்கிறது. இதில் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் நோட்டுபுத்தம், டைரி உள்ளிட்ட சில பொருட்கள் வழக்கமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதில் அதிக அளவில் பட்டாசுகள் தான் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக எந்த மாநிலத் துக்கும் நாங்கள் பட்டாசுகள் அனுப்பி வைக்கவில்லை. வெளி மாநில பட்டாசு வியாபாரிகள் உச்சநீதிமன்றத்தில் பட்டாசுக்கு எதிராக நடைபெற்ற வரும் வழக்கின் தீர்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளிவர உள்ளது. அதன் பின்னரே எங்கள் தொழில் எப்படி என்று எங்களுக்கு தெரியவரும். தொடர்ந்து பட்டாசு தொழிலுக்கு பிரச்சினை இருந்து வந்தால் சரக்கு லாரிகளை ஓட்டி வரும் 500–க்கும் மேற்பட்ட டிரைவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதை நம்பி உள்ள டிரான்ஸ்போர்ட்டு நிறுவனங்களும் மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story