ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணிக்காக கடலை ஆழப்படுத்த அதிநவீன எந்திரம்
பாம்பன் குந்துகால் கடற்கரையில் ஆழ்கடல் மீன் பிடி துறைமுகம் கட்டும் பணிக்காக கடலை ஆழப்படுத்த அதிநவீன எந்திரம் கொண்டுவரப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம்,பாம்பன் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், படகுகளுடன் மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இலங்கை கடற் படையின் கெடு பிடியால் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவே செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டு வருகிறது.
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவே மத்திய–மாநில அரசுகள் இணைந்து ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன.அதன் படி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரை மற்றும் பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை ஆகிய 2 இடங்களிலும் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் பாம்பன் குந்துகால் கடற்கரையில் கட்டப்படடு வரும் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணிக்காக கடலை தோண்டி ஆழப்படுத்தும் அதிநவீன எந்திரம் நாகூரில் இருந்து கனரக லாரி மூலம் நேற்று பாம்பன் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அக்காள்மடம் சாலையில் இருந்து குந்துகால் கடற்கரை வரை செல்லும் சாலையின் பகுதியில் தாழ்வாக மின்சார கம்பிகள் செல்வதால் இந்த எந்திரத்துடன் கூடிய வாகனம் கடப்பது சிரமம் என்பதால் அக்காள்மடம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்த கனரக வாகனம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
இந்த எந்திரத்தை குந்துகால் கடற்கரைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அதன்பிறகு கடலை ஆழப்படுத்தும் பணி தொடங்கும். குந்துகால் கடற் கரையில் துறைமுகம் கட்டும் பணியை 18 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுஉள்ளது. அது போல் விரைவில் குந்துகால் கடற் கரையிலேயே ஆழ்கடல் மீன் பிடி படகுகள் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கப்பட உள்ளது.