ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற உள்ள பணிகள் என்ன? அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற உள்ள பணிகள் என்ன? அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
x
தினத்தந்தி 17 July 2018 4:15 AM IST (Updated: 17 July 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற உள்ள பணிகள் குறித்து சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அளித்த பதில்களும் வருமாறு:–

தனவேலு (காங்): பாகூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு தகுந்தவாறு சமுதாய நல மையமாக மாற்றி அமைத்துத்தர அரசு முன்வருமா?

முதல்–அமைச்சர் நாராயணசாமி: இந்திய அரசின் பொது மருத்துவ தரவுகள் மற்றும் விதிகளின்படி தற்போதுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சமுதாய நல மையமாக மேம்படுத்தப்பட உள்ளது. இந்திய அரசின் பொது மருத்துவ தரவுகள் மற்றும் விதிகளின்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்கள் தொகைக்கு சமுதாய நல மையம் நிர்மாணிக்கப்படும்.

ஜெயமூர்த்தி (காங்): ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள தேங்காய்த்திட்டில் என்னென்ன பணிகள் நடக்க உள்ளது?

அமைச்சர் நமச்சிவாயம்: ஸ்மார்ட் மின்சார மீட்டர், ஸ்மார்ட் குடிநீர் மீட்டர், செம்மையான போக்குவரத்து மேலாண்மை, ஆவணங்களை கணினி மயமாக்குதல் ஆகிய பணிகளை திட்ட மதிப்பீடு செய்ய திட்ட ஆலோசனை வல்லுனர் தெரிவு செய்யும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. தெரிவு செய்தவுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் தெரிவு செய்யப்படும்.

என்.எஸ்.ஜே.ஜெயபால்: கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நிலம் அளித்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கேட்டு கோரிக்கை வைத்திருப்பதை அரசு அறியுமா?

நாராயணசாமி: இந்த நிறுவனத்தின் தற்போதைய நிதிநிலையை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை ஏற்பதற்கில்லை.

டி.பி.ஆர்.செல்வம் (என்.ஆர்.காங்): கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு மற்றும் சோம்பட்டு ஆகிய கிராமங்களில் ஏரிக்கரை பாதை மற்றும் உபரிநீர் செல்லும் வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்பை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அமைச்சர் நமச்சிவாயம்: உபரிநீர் செல்லும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story