புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் நுழைய முயற்சி, சபை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டசபைக்குள் நுழைய முயற்சி செய்தனர். அவர்களை சபை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் மத்திய அரசு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.
இதனை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தபோது பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் சட்டசபைக்குள் நுழைய சபாநாயகர் வைத்திலிங்கம் அனுமதி மறுத்தார்.
தொடர்ந்து ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 13–ந் தேதி இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பிற்கு தடை விதிக்கவில்லை. ஆனால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வருகிற 19–ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் சட்டபைக்கு செல்வோம் என நியமன எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்ததால் நேற்று சட்டசபை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நேற்று காலை 9.35 மணி அளவில் புதுச்சேரி சட்டசபைக்கு வந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்குள் செல்ல முயன்றனர். ஆனால் அங்கு இருந்த சபை காவலர்கள் நுழைவாயில் கதவை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.
கோர்ட்டு உத்தரவின் பேரில் வந்துள்ள எங்களை உள்ளே விடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது யார்? என நியமன எம்.எல்.ஏ.க்கள் கேட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த சபை மார்ஷல் ரமேஷ், ‘‘சபாநாயகரிடம் இருந்து எங்களுக்கு உத்தரவு வந்ததால் உங்களை உள்ளே விடமுடியாது’’ என்றார்.
அப்போது, ‘‘வாய்மொழி உத்தரவு செல்லாது. எழுத்துபூர்வ உத்தரவை எங்களுக்கு காட்டுங்கள். இதற்கு மறுத்தால் கேட் மீது ஏறி உள்ளே வந்து விடுவோம்’’ என நியமன எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்ததால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து சட்டசபைக்குள் அனுமதிக்கப்படாததால் வாசலிலேயே சிறிது நேரம் காத்து இருந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் 10.35 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதுபற்றி சாமிநாதன் எம்.எல்.ஏ கூறுகையில் ‘‘சென்னை ஐகோர்ட்டு உத்தரவை சபாநாயகர் மதிக்கவில்லை. எங்களை சபைக்குள் செல்ல அனுமதி மறுத்ததால் வருகிற 19–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சபாநாயகர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவோம்’ என்றார்.