துப்பாக்கி சுடும் போட்டி: மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த மத்திய மண்டல அணிக்கு பாராட்டு


துப்பாக்கி சுடும் போட்டி: மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த மத்திய மண்டல அணிக்கு பாராட்டு
x
தினத்தந்தி 17 July 2018 4:15 AM IST (Updated: 17 July 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த திருச்சி மத்திய மண்டல அணிக்கு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.

திருச்சி,

தமிழக காவல்துறையினருக்கான மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி மத்திய மண்டலம் சார்பில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 24 போலீசார் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 5 தங்க பதக்கங்கள், 2 வெள்ளிப்பதக்கங்கள், 3 வெண்கல பதக்கங்களை பெற்று திருச்சி மத்திய மண்டல அணி ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்தது.

துப்பாக்கி சுடும் போட்டியில் பிஸ்டல் பிரிவில் புதுக்கோட்டையை சேர்ந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தையும், கார்பைன் பிரிவில் திருச்சி மாநகரத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு அருளானந்தம் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தையும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு ஆனந்தன் ஒரு தங்கம், ஒரு வெண்கல பதக்கத்தையும், 100 மீட்டருக்கான ரைபிள் பிரிவில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் பெரியசாமி ஒரு வெண்கல பதக்கமும், 300 மீட்டருக்கான ரைபிள் பிரிவில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் அன்பரசன் ஒரு வெள்ளி பதக்கமும் பெற்றனர்.

பதக்கம் பெற்ற அனைவரும் அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தேர்வு பெற்றனர். துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் 2-ம் இடம் பெற்ற திருச்சி மத்திய மண்டல அணியில் பதக்கம் பெற்ற போலீசாரை கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார். 

Next Story