திருவண்ணாமலையில் பரபரப்பு ரஷிய நாட்டு பெண்ணிடம் பலாத்கார முயற்சி; 4 பேரிடம் விசாரணை சுயநினைவின்றி கிடந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை


திருவண்ணாமலையில் பரபரப்பு ரஷிய நாட்டு பெண்ணிடம் பலாத்கார முயற்சி; 4 பேரிடம் விசாரணை சுயநினைவின்றி கிடந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
x
தினத்தந்தி 16 July 2018 11:45 PM GMT (Updated: 16 July 2018 9:07 PM GMT)

திருவண்ணாமலையில் ரஷிய நாட்டு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுயநினைவின்றி கிடந்த அந்த பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


திருவண்ணாமலை,


திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில், ரமணாஸ்ரமம் போன்ற ஆன்மிக தலங்களும், சாத்தனூர் அணை போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன. இவற்றை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து விடுதிகளில் அறை எடுத்து தங்கி பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் ரஷிய நாட்டை சேர்ந்த 21 வயது பெண் கடந்த 12-ந் தேதி மும்பைக்கு வந்து அங்கிருந்து திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். பின்னர் அவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

பின்னர் அவர் அருணாசலேஸ்வரர் கோவில், ரமணாஸ்ரமம் போன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். கடந்த சனிக்கிழமை விடுதி அறைக்குள் சென்றவர் நேற்று வரை வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை விடுதியின் உரிமையாளர் அந்த அறையை திறந்து உள்ளே சென்று பார்த்து உள்ளார். அங்கு அவர் படுகாயம் அடைந்து அலங்கோலமான நிலையில் சுயநினைவின்றி கிடந்து உள்ளார்.


இதுகுறித்து விடுதியின் உரிமையாளர் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மீது கூட்டு பலாத்கார முயற்சி நடைபெற்றது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ரஷியபெண் போதை பழக்கம் உள்ளவர் போன்று தெரிகிறது. அவரது அறையில் பல்வேறு ரக சிகரெட்டுகள் இருந்தது என்றனர்.

Next Story