தாத்தாவின் சாவுக்கு வந்தவர்களுக்கு சாப்பாடு வாங்கச்சென்ற பேரன் விபத்தில் பலி ஆம்பூர் அருகே சோக சம்பவம்


தாத்தாவின் சாவுக்கு வந்தவர்களுக்கு சாப்பாடு வாங்கச்சென்ற பேரன் விபத்தில் பலி ஆம்பூர் அருகே சோக சம்பவம்
x
தினத்தந்தி 17 July 2018 3:30 AM IST (Updated: 17 July 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே தாத்தாவின் சாவுக்கு வந்த உறவினர்களுக்கு சாப்பாடு வாங்கச்சென்ற பேரனும் விபத்தில் பலியானார். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.


ஆம்பூர்,

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் கிஷன்குமார் (வயது 20). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கிஷன்குமாரின் தாத்தா தேவராஜ் (65) என்பவர் இறந்து விட்டார். இதனால் துக்கம் விசாரிப்பதற்காக உறவினர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.

உறவினர்களுக்கு சாப்பாடு வாங்குவதற்காக கிஷன்குமார் தனது மோட்டார் சைக்கிளில் ஆம்பூருக்கு சென்றார். அங்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்பினார். சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இருந்த தடுப்பு கம்பி மீதுபட்டு விபத்துக்குள்ளானது.


இதில் படுகாயம் அடைந்த கிஷன்குமாரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே கிஷன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் உறவினர்கள் திரண்டு வந்து ஆம்பூர் ஆஸ்பத்திரியில் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாத்தா இறந்தநிலையில், அதே வீட்டில் பேரன் விபத்தில் இறந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story