புஷ்கர விழாவையொட்டி ‘தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணியில் 15 ஆயிரம் பேர்’ நெல்லை கலெக்டர் ஷில்பா தகவல்


புஷ்கர விழாவையொட்டி ‘தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணியில் 15 ஆயிரம் பேர்’ நெல்லை கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 17 July 2018 3:45 AM IST (Updated: 17 July 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் 15 ஆயிரம் பேர் ஈடுபட இருப்பதாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.


நெல்லை,


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, ஆற்றை சுத்தப்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளை சுத்தப்படுத்தும் பணிகள் ஏற்கனவே 3 கட்டங்களாக நடந்துள்ளது. 4-வது கட்ட பணிகளும் விரைவில் நடைபெற உள்ளது.

தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் 2 நாட்கள் இந்த பணி நடைபெற உள்ளது. முதல் நாளில் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர்கள், ஆக்கிரமிப்புகளை பொக்லைன் போன்ற கனரக எந்திரங்களை கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறும். 2-வது நாளில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.


நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் 144-க்கும் மேற்பட்ட பகுதிகளாக பிரிக்கப்பட்டு தூய்மை பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள், போலீசார், வருவாய் துறையினர், வேளாண்மை துறையினர், விவசாயிகள், உள்ளாட்சி துறை அலுவலர்கள், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தொண்டு அமைப்புகளை சார்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் (பயிற்சி) சுக்ஹபுத்ரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, அண்ணா பல்கலைக்கழக டீன் சத்யநாதன், மகளிர் திட்ட இயக்குனர் அந்தோணி பெர்னாண்டோ, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமுர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story