திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு தீக்குளிக்க முயன்ற வடமாநில தொழிலாளி
வேலை பார்த்த நிறுவனத்தில் சம்பளம் கொடுக்காததால் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வடமாநில தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலும் தீக்குளிக்கும் சம்பவத்தை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரின் சோதனைகளுக்கு பிறகு மனு கொடுக்க பொதுமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வந்த வடமாநில வாலிபர் ஒருவர் திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபே சவுத்ரி (வயது 45) என்பது தெரியவந்தது.
அவர் திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள கே.ஆர்.நகர் தோட்டம் பகுதியில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் கடந்த மாதம் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி தீக்குளிக்க முயன்றுள்ளார். தொடர்ந்து அவர் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அதன் பின்னர் பிரிண்டிங் நிறுவன உரிமையாளரை போலீசார் வரவழைத்து சம்பள பணத்தை பெற்றுக்கொடுத்து, சரியான ஊதியம் வழங்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். இதன் பின்னர் தொழிலாளி அனுப்பிவைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
அவினாசியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் “ எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் டிஸ்க் அக்ரோடெக் லிமிடெட் என்ற நிறுவனம் ஒன்றில் ரூ.1,000 ரூ.2 ஆயிரம் என சீட்டு மூலம் செலுத்தி வந்தோம். 69 மாதங்கள் செலுத்திய பின்னர் பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணம் செலுத்தி முடித்த பிறகும், இன்னும் பணம் வழங்கப்படவில்லை.
இதுபோல் திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணம் செலுத்தியுள்ளனர். ரூ.20 கோடி வரை அந்த நிறுவனத்தினர் மோசடி செய்துள்ளனர். எனவே சீட்டு நடத்தி மோசடி செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்” என்றிருந்தனர்.
Related Tags :
Next Story