கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 23 பேர் கைது
அவினாசி பகுதிகளில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். அந்த வகையில் திருப்பூர் அவினாசி தாலுக்காவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் தமிழ் சிறுத்தைகள் கட்சி மாநில பொதுசெயலாளர் அகத்தியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்கள் கலெக்டர் அலுவலக வளாக வாசலில் வந்து கோஷங்கள் எழுப்பியபடி முற்றுகையிட முயன்றனர். இதைத்தொடர்ந்து வாசலில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அவினாசி தாலுக்காவுக்குட்பட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பஞ்சமி நிலம் உள்ளது. இது தற்போது தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதை மீட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல முறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உடனடியாக பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து அனுமதியின்றி முற்றுகையிட முயன்றதாக கூறி 23 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story