கதக் அருகே தற்கொலைக்கு அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு 500 பேர் கடிதம்


கதக் அருகே தற்கொலைக்கு அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு 500 பேர் கடிதம்
x
தினத்தந்தி 17 July 2018 4:48 AM IST (Updated: 17 July 2018 4:48 AM IST)
t-max-icont-min-icon

கதக் அருகே, நடைபெறும் மகதாயி போராட்டம் நேற்றுடன் 3-வது ஆண்டை நிறைவு செய்தது. இதையொட்டி, தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்கும்படி ஜனாதிபதிக்கு 500 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை, கதக், தார்வார் மற்றும் பெலகாவி ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பதற்காக மகதாயி-மல்லபிரபா நதிகள் இணைப்பு, கலசா-பண்டூரி குடிநீர் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இந்த திட்டங்களுக்கு கோவா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கர்நாடக விவசாயிகள் உண்ணாவிரதம், சாலை மறியல், முழு அடைப்பு, முற்றுகை போராட்டம் உள்பட பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர். இருப்பினும், மத்திய-மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் மகதாயி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி கதக் மாவட்டம் நரகுந்துவில் தொடர் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கர்நாடகா விவசாய சேனை, மகதாயி-மல்லபிரபா நதிகள் இணைப்பு போராட்ட குழு, கலசா-பண்டூரி குடிநீர் திட்ட போராட்ட குழு ஆகியவற்றை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். பிற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இவர்களின் தொடர் போராட்டம் நேற்றுடன் 3-வது ஆண்டை நிறைவு செய்தது. இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. நேற்று நடந்த போராட்டத்தில் விவசாயிகள் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்துக்கு 4 மடாதிபதிகள் ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், பெண்கள் என்று சுமார் 500-க்கும் அதிகமானவர்கள் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதங்கள் எழுதி தபால் மூலம் அனுப்பி வைத்தனர். கடிதத்தில், ‘மத்திய-மாநில அரசுகளின் அலட்சியத்தால் மகதாயி போராட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இதற்கிடையே, மகதாயி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக கோவா, கர்நாடகம் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினை தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பு மகதாயி நடுவர் மன்றத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story