செங்கோட்டை அருகே சீசன் களைகட்டியது: சுற்றுலா பயணிகளை கவரும் சின்ன குற்றாலம் அருவி


செங்கோட்டை அருகே சீசன் களைகட்டியது: சுற்றுலா பயணிகளை கவரும் சின்ன குற்றாலம் அருவி
x
தினத்தந்தி 17 July 2018 4:45 AM IST (Updated: 17 July 2018 5:08 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் ரோட்டில் புளியரை வழியாக சென்றால் தென் பொதிகை மலையில் அழகாக ஓடிவருகிறது சின்ன குற்றாலம் அருவி.


செங்கோட்டை

குளுகுளு சீசனை அனுபவிக்க வேண்டும் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது குற்றாலம். தென்மேற்கு பருவமழை காலத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவார பகுதிகளில் குளிர்ச்சியான மழையும், இதமான காற்றும் வீசுவது அனைவரது நெஞ்சத்தையும் கொள்ளை கொள்ளும். நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் மலைப்பகுதியில் பல்வேறு அருவிகள் உள்ளன.

அதில் சின்ன குற்றாலம் அருவியும் புகழ் பெற்றது. செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் ரோட்டில் புளியரை வழியாக சென்றால் தென் பொதிகை மலையில் அழகாக ஓடிவருகிறது சின்ன குற்றாலம் அருவி. அதாவது குற்றாலம் மெயின் அருவி போல் பொங்குமாங்கடல் மற்றும் நீர்வீழ்ச்சி போல் அமைந்திருப்பதால் இந்த அருவி ‘சின்ன குற்றாலம்’ என்று பெயர் பெற்று விளங்குகிறது. குற்றாலம் அருவிகளில் எப்போதெல்லாம் தண்ணீர் விழுமோ அப்போது இந்த சின்ன குற்றாலம் அருவியிலும் ஜோராக தண்ணீர் விழுகிறது.

இந்த ஆண்டும் சீசன் சரியான நேரத்தில் தொடங்கியதால் சின்ன குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் விழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது சீசன் களை கட்டி உள்ளதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அந்த பகுதியில் இதமான குளிர்ச்சியான காற்றும், சாரல் மழையும் விழுகிறது. இயற்கை எழில்கொஞ்சும் ரம்மியமான இடத்தில் அமைந்துள்ளதால் இந்த அருவி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.


இதனால் இந்த அருவிக்கு செங்கோட்டை, புளியரை சுற்று வட்டார மக்கள் மட்டுமல்லாமல் வெளியூரை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். புளியரையில் உள்ள குருபகவான் தட்சணாமூர்த்தி கோவிலும் பிரபலம் அடைந்துள்ளதால் அங்கு வரும் பக்தர்களும் இந்த அருவியை தேடி செல்கின்றனர்.

இந்த அருவிக்கு புளியரை வணிகவரி துறை சோதனைச்சாவடி அலுவலகத்தில் இருந்து தெற்கு மேடு வழியாக செல்ல வேண்டும். 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு செல்லும் பாதையில் 2½ கிலோ மீட்டர் தூரம் வரை தார் ரோடும், சிமெண்டு ரோடும் சீராக அமைந்துள்ளது. ஆனால் மீதி உள்ள ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு வனப்பகுதியில் ஒத்தையடி பாதையில் செல்ல வேண்டி உள்ளது. இதில் 2 இடங்களில் மூங்கில் மரங்கள் சாய்ந்து விழுந்து கிடப்பதால் அதன் அடிப்பகுதியில் குகை பாதை போல் அமைந்திருக்கிறது. இது இந்த அருவிக்கு செல்வோருக்கு சற்று சிரமத்தை கொடுக்கிறது.


மேலும் அருவி பகுதியில் அடிப்படை வசதிகளும் இல்லை. சின்ன குற்றாலம் அருவியில் விழுந்து தண்ணீர் பாய்ந்தோடும் ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை இருந்தது. அந்த அணை கடந்த 1992-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது தண்ணீரின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அந்த அணை கட்டப்படவே இல்லை. இதனால் 10 குளங்களுக்கு இந்த ஆற்றில் இருந்து செல்ல வேண்டிய தண்ணீர் வீணாகி வருகிறது.

எனவே, அனைவரையும் கவரும் சின்ன குற்றாலம் அருவி பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், தடுப்பணையை மீண்டும் கட்டி கொடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து புளியரையைச் சேர்ந்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நெல்லை மண்டல செயலாளர் செல்லத்துரை கூறியதாவது:-

அழகிய நீரூற்றுகளை காண வாருங்கள் என்று பல்வேறு மாநில அரசுகள் விளம்பரம் செய்து வருகின்றன. புளியரை தென் பொதிகை மலையின் பின்புறம் கேரளாவில் பாலருவி விழுகிறது. அந்த அருவியை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். மெயின் ரோட்டில் இருந்து அருவிக்கு செல்வதற்கு தரமான தார்சாலை அமைத்து உள்ளனர். சுற்றுலா பயணிகளை மாநில அரசின் பஸ்சில் அருவிக்கு அழைத்து சென்று, குளித்து முடித்து திரும்பும் பயணிகளை மீண்டும் மெயின் ரோட்டுக்கு அழைத்து கொண்டு வந்து விடுகின்றனர். இதற்கு கட்டணமாக ரூ.40 வசூல் செய்யப்படுகிறது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கேரளா மாநில அரசு இந்த அளவுக்கு வருவாயுடன் கூடிய சுற்றுலா வளர்ச்சியை மேற்கொள்கிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அந்த வகையில் சின்ன குற்றாலம் அருவி அடிவாரத்தில் அடிப்படை வசதிகள் செய்யவும், ஆற்றின் குறுக்கே அடித்து செல்லப்பட்ட அதே இடத்தில் மீண்டும் சிறிய தடுப்பணை கட்டி 10 குளங்களுக்கு தண்ணீர் செல்லவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த அணை கட்டும் பணி மற்றும் அருவிக்கு செல்லும் பாதையை சீரமைத்து, அங்கு அடிப்படை வசதிகளை செய்வதற்காக முன்னாள் கலெக்டர் கோ.பிரகாஷ் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்பிறகு வந்த ஆட்சியாளர்கள் அந்த பணத்தை கொண்டு பணியை செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டனர். இன்றளவும் பணிகள் எதுவும் செய்யப்படாமல் கிடக்கிறது. வனத்துறையும் இதற்கு முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது.

எனவே, புளியரை பகுதியை ஆன்மிக மற்றும் வனத்துறை சுற்றுலா பகுதியாக மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்கள் ஊருக்கு மிக அருகாமையில் இருக்கும் சின்ன குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்லவும், நல்லமுறையில் குளித்து மகிழவும் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story