நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரிக்கை


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 17 July 2018 3:15 AM IST (Updated: 17 July 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,


நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை அருகே உள்ள தாழையூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பெண்கள், முன்னாள் கவுன்சிலர் மோகன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மண் வெட்டி, சாந்துசட்டி ஆகியவற்றுடன் வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தாழையூத்து பஞ்சாயத்தில் 25 நாட்களுக்கு மேலாக வேலை நடைபெறவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டால் நிதி ஒதுக்கவில்லை என்று கூறுகிறார்கள். எனவே உடனே இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கவேண்டும். மேலும் இந்த திட்டத்தில் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் வேலை வழங்கவேண்டும். அரசு நிர்ணயம் செய்த கூலியை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.


கல்லூரியில் படிக்கின்ற பார்வையற்ற மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி.காலனி, ஆசிரியர் நல சங்க காலனியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தங்களுடைய நிலப்பிரச்சினை குறித்து மனு கொடுத்தனர்.ஆலங்குளம் அருகே உள்ள காவலாக்குறிச்சி வெண்ணிலிங்கபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அதில் மனு கொடுத்தவரை மிரட்டும் கிராம நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி இருந்தனர்.ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் பொதுச்செயலாளர் சடையப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு உரிய பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.


நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கரகாட்ட கலைஞர்கள் மற்றும் கிராமிய கலைஞர்கள் நேற்று வேடம் அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் நடைபெறுகின்ற கோவில் கொடை விழாவில் கரகாட்டம் மற்றும் கிராமிய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடக்கும். ஆனால் இரவு 10 மணிக்கு பிறகு நிகழ்ச்சி நடத்த போலீஸ் அனுமதி இல்லை என்பதால் ஏராளமான கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இரவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லை பாலவிநாயகர் பக்தர் பேரவையினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தாமிரபரணி ஆற்றில் உள்ள பாலவிநாயகர் கோவிலை அகற்றவேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்து உள்ளனர். இந்த ஆலயத்தை வழிபட்ட பிறகு தான் சுலோச்சனா முதலியார் பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. எனவே இந்த கோவிலை அகற்றக்கூடாது என்று கூறி உள்ளனர்.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச்சுவர் அமைத்து அங்கன்வாடி அமைத்து தரவேண்டும் என்று நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பினர் மனு கொடுத்தனர்.

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவர் கண்ணபிரானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த முயற்சியை கைவிடவேண்டும் என்று அவருடைய உறவினர்கள் கலெக் டரிடம் மனு கொடுத்தனர்.

Next Story