ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் பள்ளி மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் பள்ளி மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
நெல்லை,
ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் பள்ளி மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
பள்ளி மாணவன்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்தை சேர்ந்தவர் பீட்டர். இவருடைய மகன் உடையார் (வயது 16). இவன் கயத்தாறில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கூடத்திற்கு சென்ற உடையார் வீடு திரும்பவில்லை. அவனை பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதற்கிடையே பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்து கிணற்றில் உடையார் பிணமாக மிதந்தான். தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கழுகுமலை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து உடையார் உடலை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் போராட்டம்
இதற்கிடையே பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உடையார் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த அவருடைய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவன் சாவில் மர்மம் உள்ளது. மேலும் சாவுக்கு காரணமான ஆசிரியர் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நெல்லை மாநகர போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மாணவனின் உடலை உறவினர்கள் வாங்கவில்லை.
தற்கொலை?
போலீசார் விசாரணையில், உடையாருக்கும், அவனுடன் படிக்கும் மற்றொரு மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் உடையார் தாக்கியதில் இன்னொரு மாணவன் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடையாரை ஆசிரியர் கண்டித்தாராம். இதனால் மனம் உடைந்த உடையார் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் உடையாரின் காலணி கிணற்றுக்கு அருகில் கிடக்கிறது. எனவே உடையார் கொலை செய்யப்பட்டு உடல் கிணற்றுக்குள் வீசப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story