தாம்பரத்தில் 4 டன் கலப்பட டீத்தூள் பறிமுதல்


தாம்பரத்தில் 4 டன் கலப்பட டீத்தூள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 July 2018 4:15 AM IST (Updated: 18 July 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 4 டன் கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாம்பரம்,

தாம்பரம் கிஷ்கிந்தா சாலை அருகே உள்ள ஒரு வீட்டில் கலப்பட டீத்தூள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் காஞ்சீபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் 4 டன் அளவுக்கு கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் பகுதியை சேர்ந்த ராமு (வயது 50) என்பவரிடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, கலப்பட டீத்தூள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு ‘சீல்’ வைத்தனர். 

புற்றுநோய் ஏற்படும்

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

சென்னை புறநகர் பகுதிகளில் ஏராளமானவர்கள் கலப்பட டீத்தூள் வியாபாரம் செய்து வருகின்றனர். பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கலப்பட டீத்தூள் விற்பனை குறித்து நாங்கள் ரகசியமாக கண்காணித்து வருகிறோம்.

நல்ல டீத்தூளில் காய வைக்கப்பட்ட பழைய டீத்தூள் மற்றும் மரத்தூள், முந்திரி பட்டை தூள் உள்ளிட்டவற்றை சம அளவில் கலந்து கலப்படம் செய்து பாதி விலைக்கு விற்கிறார்கள். அதிக லாபம் கிடைக்கும் என்கிற நோக்கில் சில டீக்கடை உரிமையாளர்கள் இந்த கலப்பட டீத்தூளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இப்படி கலப்பட டீத்தூள் மூலம் தயார் செய்யப்படும் டீயை தொடர்ந்து குடிப்பவர்களுக்கு புற்றுநோய், கல்லீரல் நோய்கள், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட எண்ணற்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. 

‘வாட்ஸ்–அப்’ எண்

தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் கலப்பட டீத்தூள் குறித்த ஆய்வுக்கு பின்னர், அது தொடர்பான அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். கோர்ட்டு உத்தரவின் பேரில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

உணவு பொருட்களில் கலப்படம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து உணவு பொருட்கள் பாதுகாப்பு துறைக்கு 9444042322 என்ற 

‘வாட்ஸ்– அப்’ எண்ணில் தகவல் தெரிவித்தால் 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தகவல் தெரிவிப்பது ரகசியமாக பாதுகாக்கப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.  

Next Story