கனமழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு கர்நாடக அணைகளில் இருந்து 1.17 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
கனமழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து 1.17 லட்சம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மண்டியா,
கனமழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து 1.17 லட்சம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழைகர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல்நாளே கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் மற்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. அதன்பின்னர் மாநிலத்தில் போதிய மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் (ஜூன்) இறுதியில் இருந்து கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டம் தலைக்காவிரி, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், முக்கிய அணைகளான மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கண்ணம்பாடி பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கே.ஆர்.எஸ். அணைகே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், 2 அணைகளும் ஏறக்குறைய நிரம்பிவிட்டன. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி 2 அணைகளில் இருந்தும் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அதாவது, கடந்த வாரம் 2 அணைகளில் இருந்தும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கனஅடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், கடந்த 15–ந்தேதி 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து 1.15 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்காரணமாக தமிழ்நாடு மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 122.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 81,842 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
காட்டாற்று வெள்ளம்இதேபோல, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,282 அடி கொள்ளளவு தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 38,289 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 35,800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கபிலா ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், கபிலா–காவிரி ஆற்று சங்கமிக்கும் டி.நரசிப்புரா பகுதியில் அதிகளவில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அந்தப்பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வினாடிக்கு 1.17 லட்சம் கனஅடி...கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 1,17,642 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி ஆற்றில் கரையே தெரியாத அளவுக்கு காட்டாற்று வெள்ளம் செல்கிறது. காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு செல்லவும், கே.ஆர்.எஸ். பிருந்தாவன் பூங்காவுக்கு செல்லவும் நேற்று 3–வது நாளாக தடை விதிக்கப்பட்டது.