முதல்–மந்திரி மகிழ்ச்சியாக இருந்தால், மாநிலம் மகிழ்ச்சியாக இருக்கும் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


முதல்–மந்திரி மகிழ்ச்சியாக இருந்தால், மாநிலம் மகிழ்ச்சியாக இருக்கும் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 18 July 2018 4:00 AM IST (Updated: 18 July 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

முதல்–மந்திரி மகிழ்ச்சியாக இருந்தால், மாநிலம் மகிழ்ச்சியாக இருக்கும் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு, 

முதல்–மந்திரி மகிழ்ச்சியாக இருந்தால், மாநிலம் மகிழ்ச்சியாக இருக்கும் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

கூட்டணியில் குழப்பம்

பெங்களூரு ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய முதல்–மந்திரி குமாரசாமி, முதல்–மந்திரி பதவியில் இருந்தாலும், தான் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறி கண்ணீர் சிந்தினார். முதல்–மந்திரியின் இந்த கருத்து, இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

குமாரசாமியை நான் சிறு வயதில் இருந்தே நான் பார்த்து இருக்கிறேன். அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். இதற்கு முன்பு அவர் பல்வேறு வி‌ஷயங்களுக்காக கண்ணீர் சிந்தியது உண்டு. சட்டசபை தேர்தலின்போது அவர் மாற்றுத்திறனாளிகளை பார்த்து கண்ணீர் விட்டார். அதே போல தான் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுது இருக்கிறார். இதற்கு வேறு அர்த்தங்களை கற்பிப்பது சரியல்ல. கூட்டணியில் குழப்பம் ஏற்படும் வகையில் காங்கிரசார் யாரும் பேசக்கூடாது.

அவசரப்பட வேண்டாம்

பா.ஜனதா தலைவர்கள் அவசரப்படக்கூடாது. தென்இந்தியாவில் ஒரு மூலையில் நாங்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம். சிறிது காலம் பொறுத்திருந்து எங்கள் கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். அவசரப்பட வேண்டாம். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும்.

குமாரசாமி ஆட்சியை நடத்த அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். முதல்–மந்திரி மகிழ்ச்சியாக இருந்தால் மாநிலம் மகிழ்ச்சியாக இருக்கும். இதனால் நாம் அனைவரும் சேர்ந்து இந்த ஆட்சியை பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story