மாணவரை திட்டிய பேராசிரியர் பணிநீக்கம்


மாணவரை திட்டிய பேராசிரியர் பணிநீக்கம்
x
தினத்தந்தி 18 July 2018 4:45 AM IST (Updated: 18 July 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நடவடிக்கை மாணவரை திட்டிய பேராசிரியரை பணிநீக்கி செய்து அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை,

இது குறித்து கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வைரம் கூறியதாவது. எங்கள் கல்லூரியை சேர்ந்த மாணவர் சஞ்சய் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக, மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரிக்கு நேற்று ஒருநாள் விடு முறை விடப்பட்டது. இங்கு ஏராளமான பேராசிரியர்கள் மற்றும் தற்காலிக பேராசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

அதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் உற்பத்தியியல் பிரிவு 2-ம் ஆண்டுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் தற்காலிக பேராசிரியர் தான். அவர் இங்கு பணியில் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறது. இந்த நிலையில் மாணவர் சஞ்சய் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டதற்கு பேராசிரியர் முருகன் தான் காரணம் என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் பேராசிரியர் முருகனுக்கு தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால் அவர் திட்டியதால் தான் சஞ்சய் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்று மாணவர்கள் கூறினார்கள். இதன் காரணமாக பேராசிரியரை தொடர்ந்து பணிக்கு வைத்திருந்தால் அது மாணவர்களின் போராட்டத்தை மேலும் தூண்டும் வகையில் அமையும். எனவே அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று அனைத்து பேராசிரியர்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பேராசிரியர்கள், மாணவர்களை தவறாக திட்ட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story