காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து கர்நாடக எம்.பி.க்களுடன் குமாரசாமி டெல்லியில் இன்று ஆலோசனை


காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து கர்நாடக எம்.பி.க்களுடன் குமாரசாமி டெல்லியில் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 18 July 2018 3:30 AM IST (Updated: 18 July 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து முதல்–மந்திரி குமாரசாமி, கர்நாடக எம்.பி.க்களுடன் டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

பெங்களூரு, 

காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து முதல்–மந்திரி குமாரசாமி, கர்நாடக எம்.பி.க்களுடன் டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் எம்.பி.க்களுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக எம்.பி.க்கள் கூட்டம்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 உறுப்பினர்களை கர்நாடக அரசு நியமனம் செய்தது. இந்த ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து, அதன் வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்–மந்திரி குமாரசாமி பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது குறித்து விவாதிக்க கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்துகொள்ளுமாறு கர்நாடகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன் (ஐ–போன்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்

இதற்காக முதல்–மந்திரி குமாரசாமி நேற்று காலை 11 மணிக்கு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானை நேரில் சந்திதது, உணவு தேவை மற்றும் உணவு பொருட்களை பாதுகாத்து வைக்க தேவையான கிடங்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். நேற்று இரவு டெல்லியில் தங்கிய அவர், இன்று நிதி, ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரிகளை நேரில் சந்தித்து பேசுகிறார்.

கர்நாடக எம்.பி.க்களின் கூட்டத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு கர்நாடக பவனில் தங்கும் அவர், நாளை(வியாழக்கிழமை) 8.10 மணிக்கு டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு 10.55 மணிக்கு பெங்களூரு வந்தடைகிறார்.

உத்தரவு பிறப்பிக்கவில்லை

முன்னதாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த குமாரசாமி, “கர்நாடக எம்.பி.க்கள் கூட்டம் நாளை (அதாவது இன்று) மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அழைப்பிதழுடன் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போன் பரிசாக வழங்கியதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு செல்போன் வழங்குமாறு அதிகாரிகளுக்கு நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு செல்போன் வழங்கப்பட்டு இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி நான் விசாரிக்கிறேன்“ என்றார்.

இதற்கிடையே கர்நாடக எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போனை தான் வழங்கியதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். நல்லெண்ண அடிப்படையில் தனிப்பட்ட முறையில் என்னுடைய சொந்த செலவில் எம்.பி.க்களுக்கு செல்போனை பரிசாக வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

செல்போனை திருப்பி அனுப்பிய பா.ஜனதா எம்.பி.

பா.ஜனதாவை சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. முதல்–மந்திரி குமாரசாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கர்நாடக எம்.பி.க்கள் கூட்டத்தை நாளை(இன்று) டெல்லியில் கூட்டி இருப்பதாக எனக்கு கர்நாடக அரசிடம் இருந்து அழைப்பு வந்தது. அத்துடன் ரூ.1 லட்சம் விலை மதிப்புள்ள ஒரு ‘ஐ போன்‘ அதாவது செல்போனை அனுப்பி இருக்கிறீர்கள். அரசின் வீண் செலவுகளை குறைப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போனை பரிசாக வழங்கி இருக்கிறீர்கள். இது சரியா?. துப்புரவு தொழிலாளர்களுக்கு மாநில அரசால் சம்பளம் வழங்க முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் நான் அரசு வழங்கியுள்ள செல்போனை ஏற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளேன். அந்த போனை உங்களுக்கு திருப்பி அனுப்புகிறேன். நமது நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள தொடர்ந்து உழைத்து வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்“ என்றார்.


Next Story