ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 369 வீடுகள் இடிப்பு: மாற்று இடம் கேட்டு சாலை மறியல்


ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 369 வீடுகள் இடிப்பு: மாற்று இடம் கேட்டு சாலை மறியல்
x
தினத்தந்தி 18 July 2018 3:22 AM IST (Updated: 18 July 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் தில்லைகாளியம்மன் ஓடையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 369 வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மாற்று இடம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் தில்லை காளியம்மன் ஓடையின் வழியாக பாசிமுத்தான் வாய்க்காலில் இருந்து வரும் உபரி நீர் மற்றும் சிதம்பரம் நகரில் சேரும் மழைநீர் வழிந்தோடும். இதனால் நகரின் வெள்ள வடிகாலாக தில்லைகாளியம்மன் ஓடை அமைந்து இருந்தது.

இந்த ஓடையின் இரு கரையோர பகுதியிலும் பலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி இருந்தனர். இதனால் சுமார் 70 முதல் 120 மீட்டர் வரை அகலம் கொண்டதாக இருந்த ஓடை குறுகி 10 மீட்டர் அகலத்துக்கு தற்போது இருந்தது. இதையடுத்து வெள்ள பேரிடர் தடுப்பு திட்டத்தின் கீழ் தில்லைகாளியம்மன் ஓடை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 15-ந்தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முழுவீச்சில் நடந்தது. இதில் மொத்தம் 369 வீடுகள், 2 கோவில்கள், 1 நியாய விலைக்கடை, நகராட்சி கழிப்பறை கட்டிடம், 10-க்கும் மேற்பட்ட கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

இதில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட அண்ணா தெரு, கோவிந்தசாமி தெரு, கொத்தக்குடி தெரு, குமரன் தெரு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10.50 மணி அளவில் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் பஸ் நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட நபர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சரியான காலஅவகாசம் இன்றி வீடுகளை இடித்ததை கண்டித்தும், மாற்ற இடம் வழங்க கோரியும், நிவாரண உதவி வழங்கக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இப்பிரச்சினை குறித்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று போலீசார் கூறினர். இதனை ஏற்று பாதிக்கப்பட்டவர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து ஊர்வலமாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர்.

தொடர்ந்து, அங்கு கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தி.மு.க. நகர துணை செயலாளர் பாலு, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ராமச்சந்திரன், முத்து மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கோட்டாட்சியர், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதை ஏற்று பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலை மறியலால் வேணுகோபால்பிள்ளை தெருவில் சுமார் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story