காவிரி ஆறு-பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


காவிரி ஆறு-பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 July 2018 10:45 PM GMT (Updated: 17 July 2018 9:55 PM GMT)

செம்பனார்கோவில், ஆக்கூர் பகுதியில் உள்ள காவிரி ஆறு-பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கூர்,

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் மற்றும் ஆக்கூர் சுற்றுவட்டார கடைமடை பகுதியை சேர்ந்த விவசாயிகள் காலங்காலமாக குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்து வந்தனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக பாசனத்திற்கு தண்ணீரின்றி ஒருபோக சாகுபடி செய்வதே மிகவும் கேள்வி குறியாகிவிட்டது. இதனால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் இறந்துபோன சம்பவங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளன. இதற்கு வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட கடும் வறட்சியே காரண மாகும்.

செம்பனார்கோவில், ஆக்கூர் ஆகிய சுற்று வட்டார கடைமடை பகுதிகளில் உள்ள காவிரி ஆறு மற்றும் பாசன வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அங்கு அதிக அளவில் செடி-கொடிகள், மரங்கள் வளர்ந்து காட்சி அளிக்கிறது. குறிப்பாக கிடாரங்கொண்டான் ஊராட்சியில் செல்லும் காவிரி ஆற்றில் நாணல்கள், செடி-கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் காவிரி ஆறு இருக்கும் இடமே தெரியாதபடி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லும்போது தடை ஏற்பட்டு காவிரிநீர் வழிந்து ஊருக்குள் புகும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.

வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால், அந்த தண்ணீர் செம்பனார்கோவில் கடைமடை பகுதிக்கு வந்து சேர 10 நாட்களுக்கு மேலாகும். அதன்படி தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தடையின்றி கடைமடை பகுதி முழுவதும் செல்வதற்கு செம்பனார்கோவில், ஆக்கூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள காவிரி ஆறு மற்றும் பாசன வாய்க்கால்களில் மண்டி கிடக்கும் செடி, கொடிகள், குப்பைகளை தூர்வார உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story