‘யாருடைய பின்புலத்தில் ரஜினிகாந்த் பேசுகிறார் என்று மக்களுக்கு தெரியும்’ கனிமொழி எம்.பி. பேட்டி


‘யாருடைய பின்புலத்தில் ரஜினிகாந்த் பேசுகிறார் என்று மக்களுக்கு தெரியும்’ கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 17 July 2018 10:28 PM GMT (Updated: 17 July 2018 10:28 PM GMT)

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு ஆதரவான கருத்தை தெரிவிக்கும் நடிகர் ரஜினிகாந்த் யாருடைய பின்புலத்தில் இருந்து கருத்துகளை தெரிவிக்கிறார் என்று மக்களுக்கு தெரியும் என விழுப்புரத்தில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் ஒருங்கிணைந்த தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துசோழன், மாவட்ட துணை செயலாளர்கள் மைதிலி ராஜேந்திரன், வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் அமைச்சர்கள், முக்கிய தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சோதனையோடு மட்டும் நின்றுவிடாமல் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணையும் நடைபெற வேண்டும்.

வருமான வரித்துறை சோதனை தொடர்பாக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மத்திய அரசு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அச்சுறுத்துவதற்காக இந்த சோதனையை பயன்படுத்தக்கூடாது.

மத்திய அரசு மக்களுக்குகாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவர்கள் கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யால் எல்லா தொழிலும் வீணாகிவிட்டது. தமிழகத்தில் அரசு என்று ஒன்று இருந்தால் தானே சட்டம்-ஒழுங்கு சிறப்பானதாக இருக்கும். ஆனால் தமிழக அரசு காவல்துறையை, போராடக்கூடிய மக்களை எதிர்ப்பதற்கும், பொய் வழக்கு போடுவதற்கும், எதிர்கட்சி தலைவர்களை கைது செய்வதற்கும் தான் பயன்படுத்து கிறது.

ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் ஒன்றும் இதுவரை நிறைவேற்றவில்லை. பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் தாய்-பிள்ளை உறவுகளாகவே உள்ளது. இதனால் தான் இந்த வருமான வரி சோதனைகள் நாடகமாக மாறிவிடக்கூடாது என்பதை தெளிவாக சொல்கிறோம்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் பசுமை வழிச்சாலையை ஆதரித்து பேசுகிறார், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எதிர்ப்பு கருத்து தெரிவிக்கிறார். யாருடைய பின்புலத்தில் இருந்து இந்த கருத்துகளை ரஜினிகாந்த் தெரிவிக்கிறார் என்பது மக்களுக்கு தெரியும்.

ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டபோது பிரதமர் மோடி பல உறுதிமொழிகளை கொடுத்தார். குறிப்பாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. இது குறித்து தெலுங்குதேச எம்.பி.க்கள் வரும் கூட்டத்தொடரில் பிரச்சினையை எழுப்பும் போது தி.மு.க. அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராதாமணி, மாசிலாமணி, உதய சூரியன், சீத்தாபதி சொக்கலிங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் உமா மூர்த்தி, செல்வி, கலா சுந்தர மூர்த்தி, அருள்மொழி, ரேணுகா, மாவட்ட பொருளாளர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story