கம்பத்தில் உள்ள குளங்களின் கரையை சீரமைக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சுவரொட்டி
கம்பத்தில் உள்ள குளங்களின் கரையை சீரமைக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சார்பாக பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கம்பம்,
கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள குளங்களின் கரைகளை பருவமழை பெய்யும் முன்னரே பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர். இதையடுத்து கண்மாய், வாய்க்கால் கரைகளை பராமரிப்பு மற்றும் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் கம்பத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் கம்பத்தில் உள்ள ஒடப்படி குளம், ஒட்டுக்குளம், வீரப்பநாயக்கன் குளத்தின் கரை அகலப்படுத்தும் பணிகள் தரமற்றதாக நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை மாவட்ட அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வாகனங்களில் கொண்டு செல்லமுடியாத சூழ்நிலை உள்ளதாக குற்றம்சாட்டினர். ஆனால் அதன்பின்னரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரையை சரி செய்யவில்லை.
இந்நிலையில் தற்போது பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் ஒடப்படிகுளம், ஒட்டுக்குளம், வீரப்பநாயக்கன் குளத்தின் கரைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. இதையடுத்து பொதுப்பணித்துறை நிர்வாகம் கரையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கோரி கம்பத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் கம்பம் ஒடப்படிகுளம், ஒட்டுக்குளம், வீரப்பநாயக்கன்குளம் ஆகியவற்றின் கரையை சீரமைக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story