பட்டிவீரன்பட்டி பகுதியில் மழை: மானாவாரி நிலங்களில் விவசாய பணிகள் தீவிரம்
பட்டிவீரன்பட்டி பகுதியில் மழை பெய்து வருவதால் மானாவாரி நிலங்களில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பட்டிவீரன்பட்டி,
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம், சித்தரேவு, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, நல்லாம்பிள்ளை, நெல்லூர், சுந்தரராஜபுரம், சாலைப்புதூர், தேவரப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்வதற்கான அறிகுறிகள் உள்ளதால் மழைநீரை மட்டுமே நம்பி நடைபெறும் மானாவாரி விவசாய பணிகள் தொடங்கியுள்ளன.
தற்போது மானாவாரி விவசாய நிலங்களில் விதைகளை விதைத்து உழும் அளவிற்கு மண்ணில் ஈரப்பதம் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பகுதியில் ஆயிரக்கணக் கான ஏக்கர் பரப்பளவில் உள்ள மானாவாரி நிலங்களில் விவசாய பணிகள் தொடங்கியுள்ளன.
கம்பு, சோளம், நிலக்கடலை, மக்காச்சோளம் மற்றும் ஊடுபயிரான மொச்சை, தட்டாம்பயறு போன்ற மானாவாரி பயிர்களை விவசாயிகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பயிர்கள் 3 முதல் 4 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். விதைப்பிற்கு பின்னர் தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
தற்போது இந்த பகுதிகளில் விவசாய பணிகள் தொடங்கியுள்ளதால் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. உழுதல், விதை விதைப்புப்பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏர் கலப்பை கொண்டு உழும் மாடுகளுக்கு பற்றாக் குறை உள்ளதால் சில விவசாயிகள் டிராக்டர்களை கொண்டு உழுது வருகின்றனர். ஒரு மணி நேரம் டிராக்டர் மூலம் உழுவதற்கு வாடகையாக ரூ.600 கொடுக் கிறார்கள்.
Related Tags :
Next Story