கோவில்களில் சைக்கிள் திருடியவர் கைது


கோவில்களில் சைக்கிள் திருடியவர் கைது
x
தினத்தந்தி 18 July 2018 4:20 AM IST (Updated: 18 July 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பெருமாள் கோவில், ஈஸ்வரன் கோவில் பகுதியில் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர், 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதமாக சைக்கிள்கள் அதிக அளவில் திருட்டு போனது. இதைத்தொடர்ந்து தெற்கு போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சைக்கிள் திருட்டு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த செல்வக்குமார்(வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் திருப்பூரில் பழைய பஸ் நிலையம் பகுதியில் தங்கியிருந்து சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இவரிடம் இருந்து 11 சைக்கிள்களை தெற்கு போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் 3 சைக்கிள்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதம் உள்ள 8 சைக்கிள்கள் தெற்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், செல்வக்குமார், திருப்பூர் ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில் பகுதிகளில் இருந்து மேற்கண்ட சைக்கிள்களை திருடியுள்ளதும், திருடிய சைக்கிள்கள் அனைத்தையும் பழைய பஸ் நிலையம் சுற்றுப்புற பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தங்களில் நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளதும் தெரியவந்தது. தனக்கு பணம் தேவைப்படும் நேரத்தில் ஒவ்வொரு சைக்கிளாக விற்று செலவு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில் பகுதிகளில் சைக்கிளை பறிகொடுத்தவர்கள் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களுடைய சைக்கிளின் அடையாளத்தை கூறி பெற்றுச்செல்லலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் திருட்டு போன சைக்கிள்கள் பல, பழைய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் போலீசாரிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். 

Next Story