காமராஜர் வீடுகட்டும் திட்டத்தில் நிதிநிலைமைக்கேற்ப மானியம் வழங்கப்படும்


காமராஜர் வீடுகட்டும் திட்டத்தில் நிதிநிலைமைக்கேற்ப மானியம் வழங்கப்படும்
x
தினத்தந்தி 18 July 2018 4:55 AM IST (Updated: 18 July 2018 4:55 AM IST)
t-max-icont-min-icon

காமராஜர் வீடுகட்டும் திட்டத்தில் மானியத்தொகை நிதிநிலைமைக்கேற்ப வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார்.

புதுச்சேரி,

சட்டசபையில் கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் கேட்ட கேள்விகளும், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அளித்த பதில்களும் வருமாறு.

தனவேலு (காங்): பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலை வகுப்பிற்கான கணினி, தமிழ் மற்றும் பொருளாதார ஆசிரியர்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வந்து பணியாற்றுவதையும், இப்பள்ளியில் 2 கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதையும் அரசு அறியுமா?

அமைச்சர் கமலக்கண்ணன்: ஆசிரியர்கள் பற்றாக்குறையை களையும் வகையில் தேவையான மாற்று ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் உள்ள 2 கட்டிடங்களையும் சீர்செய்து மேம்படுத்த மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. நிதி நிலைமைக்கேற்ப இந்த நிதியாண்டில் இப்பணிகளை மேற்கொள்ள முயற்சிக்கப்படும்.

ஜெயமூர்த்தி (காங்): குடிசைமாற்று வாரியத்தின் மூலம் காமராஜர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகட்டி முடித்த பின்னரும் 2-வது மற்றும் 3-வது தவணை மானியத்தொகை வழங்கப்படவில்லை.

முதல்-அமைச்சர் நாராயணசாமி: தற்போது வீடு கட்டி முடிவடையும் தருவாயில் உள்ள பயனாளிகளுக்கு 2-வது மற்றும் 3-வது மானியத்தொகை நிதிநிலைக்கேற்ப வழங்கப்படும்.

லட்சுமிநாராயணன்: அரசு ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவினை சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு அந்த இடத்தில் செயல்படுத்த ஆவன செய்யப்படுமா?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: அவசர சிகிச்சை பிரிவினை அவுட்சோர்சிங் முறையில் நடத்துவது பரிசீலனையில் உள்ளது. இந்த பிரிவு மருத்துவமனையின் உள்ளே செயல்படுவதே வழக்கம்.

தீப்பாய்ந்தான்: புதுச்சேரியில் 6 தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருந்தும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக மேற்கூறிய மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதை அரசு அறியுமா?

நாராயணசாமி: புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் அனுமதிக்கப்படும் விபத்து, அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு தேவையான உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சிகிச்சையின்போது நோயாளி, உறவினரின் எழுத்துப்பூர்வ வேண்டுகோள் இல்லாமல் எந்த நோயாளியும் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவதில்லை.

வையாபுரி மணிகண்டன்: சட்டசபை செயலகத்தில் பணிபுரியும் 60 தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசுக்கு எண்ணம் உண்டா?

நாராயணசாமி: சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்து நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபின் அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story