16 மாதங்கள் கட்டணம் செலுத்தாததால் பல்நோக்கு புகலிட கட்டிடத்தில் மின் இணைப்பு துண்டிப்பு


16 மாதங்கள் கட்டணம் செலுத்தாததால் பல்நோக்கு புகலிட கட்டிடத்தில் மின் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 18 July 2018 11:15 PM GMT (Updated: 18 July 2018 6:08 PM GMT)

ராமேசுவரத்தில் பல்நோக்கு புகலிட கட்டிடத்தில் 16 மாதங்களாக மின்சார கட்டணம் செலுத்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தங்கச்சிமடம் அருகே பேக்கரும்பு பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் பொதுப் பணித் துறையின் மூலம் ஆபத்து காலங்களில் மக்கள் தங்குவதற்கு வசதியாக சுமார் 1000 பேர் தங்கும் வகையில் ரூ.2 கோடியே 75 லட்சம் நிதியில் சமுதாய கூட வடிவில் பல் நோக்கு புகலிட கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டது.

இந்நிலையில் பல்நோக்கு புகலிட கட்டிடத்திற்கு கடந்த 16 மாதங்களாக மின்சார கட்டணம் ரூ.2 லட்சம் செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பொதுப்பணித்துறையோ, ஊராட்சி, மத்திய அரசின் பாதுகாப்பு துறை என எந்த துறை அதிகாரிகளும் கட்டணத்தை செலுத்த முன்வராததால் மின்இணைப்பு துண்டிக்கப் பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப் பட்டதால் அங்கு தங்கி இருந்த பட்டாலியன் போலீசார் அனைவரும் தற்போது ராமேசுவரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கி தினமும் அப்துல்கலாம் மணிமண்டபம் பாதுகாப்பு பணிக்கு சென்று வருகின்றனர்.


இது பற்றி யூனியன் அதிகாரிகளிடம் கேட்டபோது, பேய்கரும்பில் அப்துல்கலாம் மணிமண்டபம் அருகே பொதுப்பணித்துறையின் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்நோக்கு புகலிட கட்டிடமானது இது வரையிலும் எழுத்துப் பூர்வமாக மண்டபம் யூனியனில் ஒப்படைக்கப்படவில்லை. முறையாக ஒப்படைக்கப்படாத நிலையில் பல்நோக்குபுகலிடகட்டிடத்திற்கு மின்சார கட்டணம் கட்ட முடியாது. இது வரையிலும் இந்த கட்டிடம் பொதுப் பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story