சந்தன மரத்தை வெட்டி கடத்திய தந்தை-மகன் உள்பட 7 பேர் கைது
கம்பம் கம்பராய பெருமாள் கோவிலில், சந்தன மரத்தை வெட்டி கடத்திய தந்தை-மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கம்பம்,
கம்பம் கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் சந்தன மரம் ஒன்று இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி கடத்தி சென்றனர். இதற்கிடையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த மரத்தை முழுவதும் வெட்டி கடத்தி சென்றனர்.
கோவில் வளாகத்தில் இருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கோவில் காவலாளி வடமலைராஜ் (வயது 57) பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாண்டி, அய்யம்மாள் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார், கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சாக்குமூட்டையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையை போலீசார் சோதனை செய்தனர். அதில், சந்தனமர கட்டைகள் துண்டு துண்டாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை உடனடியாக பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள், கூடலூர் அண்ணாநகரை சேர்ந்த பசுபதி (22), கம்பம் நாட்டுக்கல் தெருவை சேர்ந்த செல்வம் (40) என்பதும் சேலத்துக்கு விற்பனை செய்வதற்காக சந்தன கட்டைகளை அவர்கள், கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் தனது கூட்டாளிகள் 7 பேருடன் சேர்ந்து கம்பம் கம்பராயப்பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்த சந்தனமரத்தை வெட்டி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பா என்ற முருகன் (47), அவருடைய மகன் அருண் (20), விஜி (35), நல்லமாயன் (55), கவாஸ்கர் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள போதிராஜா, தினேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சந்தன கட்டைகள், கோடரிகள், ரம்பம், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி கூறும்போது, ‘பிடிபட்டவர்களில் ஒரு குழுவினர் சந்தனமரங்களை தேடி செல்வார்கள். மற்றவர்கள் மரத்தை வெட்டி சிறிய கட்டைகளாக்கி கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்துள்ளனர். இவர்களுக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.
Related Tags :
Next Story