மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வாலிபர் உடல் கருகி பலி


மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வாலிபர் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 18 July 2018 11:00 PM GMT (Updated: 18 July 2018 7:01 PM GMT)

செம்பனார்கோவில் அருகே கோவில் திரு விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் ‘சைலென்சரில்’ உரசியதால் வெப்பம் அதிகரித்து வெடித்து சிதறின. இதில் பட்டாசுகளை கொண்டு சென்ற வாலிபர் உடல் கருகி பலியானார்.

செம்பனார்கோவில்,

நாகை மாவட்டம் தரங்கம்பாடி கேசவன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன் ராஜமாணிக்கம்(வயது 23). கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மஞ்சக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தருமன் மகன் சதீஷ்(25). இவர்கள் இருவரும் நாகை மாவட்டம் தில்லையாடியில் உள்ள மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

திருமணம், கோவில் திருவிழா போன்ற விழாக்களில் நடத்தப்படும் வாண வேடிக்கைகளுக்காக இவர்கள் பட்டாசுகளை தயார் செய்து கொடுப்பது வழக்கம். மேலும் இந்த பட்டாசுகளை ஆர்டர் செய்தவர்களின் வீடுகள் மற்றும் கோவில்களுக்கு கொண்டு சென்று வெடிக்க வைக்கும் வேலையையும் இவர்கள் செய்து வந்தனர்.

இந்த நிலையில் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் ஒரு கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் வாணவேடிக்கை நடத்த ராஜமாணிக்கம் வேலை செய்யும் பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசுகளை ஆர்டர் செய்து இருந்தனர். இதனால் பட்டாசுகளை எடுத்துக்கொண்டு நேற்று அதிகாலை ராஜமாணிக்கமும், சதீசும் ஒரு மோட்டார் சைக்கிளில் தொடுவாய் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை சதீஷ் ஓட்டினார். ராஜமாணிக்கம் மோட்டார் சைக்கிளின் பின்புறம் உட்கார்ந்து இருந்தார். பட்டாசுகள் வைத்து இருந்த பையை அவர்கள் மோட்டார் சைக்கிளின் வலது பக்கத்தில் தொங்க விட்டபடி சென்றனர்.

நாகை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கூர் அருகே கருவேலி என்ற இடத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது பட்டாசு இருந்த பை மோட்டார் சைக்கிளின் ‘சைலென்சரில்’ உரசிக்கொண்டே சென்றது. அப்போது ‘சைலென்சர்’ வெப்பத்தால் பட்டாசுகளில் சூடு ஏற்பட்டு திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இதில் ராஜமாணிக்கம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சதீசுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும், பட்டாசு வெடித்ததில் மோட்டார் சைக்கிளும் உருக்குலைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தாசில்தார் ஸ்ரீதர், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சதீஷ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வாலிபர் உடல் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story