ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்தில் திட்ட பணிகள் கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டார்


ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்தில் திட்ட பணிகள் கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 18 July 2018 10:45 PM GMT (Updated: 18 July 2018 7:12 PM GMT)

மன்னார்குடி ஒன்றிய பகுதிகளில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டார்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மூனாம்சேத்தி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் மதிப்பில் தனிநபர் மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டியினை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பயனாளியிடம் மண்புழு உரம் தயாரிப்பு முறை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் மதிப்பில் தனிநபர் இல்ல கழிவறை கட்டப்பட்டு வருவதை அவர் பார்வையிட்டார். பயனாளியிடம் தனி நபர் இல்ல கழிவறை பயன் படுத்த வேண்டும் எனவும், கழிவறை கட்டாமல் இருக்கும் கிராம மக்களிடம் தனிநபர் கழிவறையின் அவசியம் குறித்து எடுத்து கூற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து மூவாநல்லூர் கிராமத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் குடியிருப்பு வீடு கட்டப்பட்டு வருவதை கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டார். பின்னர் பணிகளின் முன்னேற்றம் குறித்து பயனாளியிடம் கேட்டறிந்து, வங்கி கணக்கில் அரசின் கட்டுமான உதவித்தொகை சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்தார். தொடர்ந்து தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் 3 தனிநபர் கழிவறைகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பயனாளிகளிடம் அரசின் கழிவறை கட்டுமான தொகை வழங்கப்பட்டுவிட்டதா? என்பதை கேட்டறிந்தார்.

பின்னர் மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வருகை பதிவேடு, இருப்பு பதிவேடு, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவேடு, கழிவு செய்யப்பட்ட பொருட் களுக்கு உண்டான பதிவேடு ஆகியவற்றை கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story