விக்கிரமசிங்கபுரம் நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கோரிக்கை
விக்கிரமசிங்கபுரம் நகரசபை அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
விக்கிரமசிங்கபுரம்,
விக்கிரமசிங்கபுரம் நகரசபை அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
சுத்திகரிக்கப்படாத தண்ணீர்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகரசபைக்கு உட்பட்டது கீழக்கொட்டாரம் மற்றும் மேலக்கொட்டாரம் பகுதிகள். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக நகரசபை சார்பில், மேலக்கொட்டாரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் உள்ள உறைகிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காது என்பதனால் இந்த திட்டத்திற்கு அப்போதே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் சுமார் ரூ.69 லட்சம் மதிப்பில் கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீரை கீழக்கொட்டாரம் மற்றும் மேலக்கொட்டாரம் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் குடிநீர் சுத்திகரிக்கப்படாமல் சுத்தம் இல்லாமல் வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகரசபை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்தனர்.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் நேற்று கொட்டாரம் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு வரும் குடிநீரை பாட்டில்களில் பிடித்து, நகரசபை அலுவலகத்திற்கு வந்து, அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு நகரசபை ஆணையாளர், மேலாளர், தலைமை எழுத்தர் யாரும் இல்லை. எனவே நகரசபை அலுவலர்கள் சிலர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் ஆணையாளரிடம் பேசி அவர் வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். உடனே நகரசபை அலுவலர்கள் இதுகுறித்து செல்போன் மூலம் ஆணையாளருக்கு தெரிவித்தனர். உடனே அவர் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story