கோத்தகிரி கன்னிகாதேவி காலனி பகுதியில் 5 கரடிகள் சுற்றித்திரிந்ததால் பரபரப்பு


கோத்தகிரி கன்னிகாதேவி காலனி பகுதியில் 5 கரடிகள் சுற்றித்திரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 July 2018 9:45 PM GMT (Updated: 18 July 2018 7:30 PM GMT)

கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி பகுதியில் பகல் நேரத்தில் 5 கரடிகள் கும்பலாக சுற்றித்திரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கன்னிகா தேவி காலனியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு அருகில் விடுதிகள், கிருஷ்ணாபுதூர், இந்துக்கள், கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் மக்களின் பொது மயானங்கள், பெட்ரோல் பங்க், தனியார் கல்லூரி ஆகியவை உள்ளன. இந்த பகுதிகளுக்கு பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இந்த சாலை வழியாக நடந்தே சென்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணியளவில் 5 கரடிகள், தனியார் கல்லூரி அருகே உள்ள தேயிலை தோட்டத்திலிருந்து இறங்கி சாலை வழியாக சென்று கிறிஸ்துவ மக்களின் மயான வளாகத்திற்குள் சென்றன.

பின்னர் அந்த கரடிகள் ஒன்றோடொன்று சண்டையிட்டு கொண்டு அங்குமிங்குமாக ஓடியவாறு இருந்தன. இதை அந்த பகுதியில் நடந்து சென்றவர்கள் வேடிக்கை பார்த்ததுடன் செல்போன்களில் படம் பிடித்தனர். கரடிகளைக் கண்ட நாய்கள் அவற்றை துரத்தி சென்றதால் கரடிகள் அருகிலிருந்த கன்னிகாதேவி காலனி குடியிருப்பு பகுதிக்கு சென்றன. இதுகுறித்து தகவலறிந்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து, கரடிகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கரடிகள் குடியிருப்புகள் அருகே உள்ள புதரில் பதுங்கிக்கொண்டன. இதனை தொடர்ந்து கரடிகளை வனப்பகுதிக்கு விரட்ட முடியாமல் வனத்துறையினர் திரும்பி சென்றனர். கடந்த வாரத்தில் இதே பகுதியில் அதிகாலை நேரத்தில் ஒருவர் காரில் சென்று கொண்டிருக்கும் போது கரடி ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் நடந்து சென்று வரும் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ஆகவே கரடிகளால் பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், இந்த பகுதியில் லண்டானா செடிகள் அடர்ந்து புதர் போல வளர்ந்துள்ளதால் அதிலுள்ள பழங்களை உண்பதற்காக கரடிகள் வந்துள்ளன. கரடிகளை கண்டால் பொதுமக்கள் தொந்தரவு செய்யவோ அல்லது செல்போனில் படம் பிடிக்கவோ முயற்சிக்க கூடாது. உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது. அவ்வாறு வந்தால் எச்சரிக்கை தேவை. கரடிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து ஆய்வு செய்து அடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டி விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

Next Story