பாளையங்கோட்டை சிறையில் கைதி தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


பாளையங்கோட்டை சிறையில் கைதி தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 19 July 2018 2:30 AM IST (Updated: 19 July 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம்? குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.

நெல்லை, 

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம்? குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.

விசாரணை கைதி

நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 53). விவசாயியான இவர், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி, கருப்பையா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த 4-ந் தேதி போலீசார் அவரை கைது செய்து, சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் கருப்பையா நேற்று முன்தினம் இரவு தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த மற்ற கைதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஜெயில் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள், அந்த அறைக்கு வந்து கருப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி கலெக்டர் விசாரணை

கருப்பையா தற்கொலை செய்தது குறித்து நெல்லை உதவி கலெக்டர் மைதிலியும் நேற்று விசாரணை நடத்தினார். அவர், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்றார். கருப்பையா தூக்குப்போட்டு இறந்த அறையை பார்வையிட்டார். பின்னர் அவர், கைதியின் உடல் வைக்கப்பட்டு இருந்த பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டார்.

பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் விசாரணை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story