மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க விவசாயிகள் டெல்லி பயணம்


மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க விவசாயிகள் டெல்லி பயணம்
x
தினத்தந்தி 19 July 2018 4:30 AM IST (Updated: 19 July 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க கும்பகோணத்தில் இருந்து விவசாயிகள் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.

கும்பகோணம்,

பயிர் காப்பீட்டு திட்டங்களுக்கான பிரிமியம் தொகையை விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட மத்திய அரசின் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் உரிய இழப்பீட்டு தொகையினை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருவதை கண்டித்தும், பயிர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள் விலை அறிவிப்பை கண்டித்தும் அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாளை(வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத்தை நோக்கி கண்டன பேரணி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் விமலநாதன், வட்ட தலைவர் ஆதி கலியபெருமாள், ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், அய்யாரப்பன் உள்ளிட்ட விவசாயிகள் நேற்று கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் சோழன் ரெயிலில் புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் பாராளுமன்றம் முன்பு நெல் விதைகளை கொட்டியும், நாற்றுகளை நட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக கையில் நாற்றுகள், நெல் விதைகளுடன் அவர்கள் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து கும்பகோணம் பகுதி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:-

மத்திய அரசு 2018-2019-ம் ஆண்டுக்கு நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.1750 என அறிவித்துள்ளது. இது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் 6 ஆண்டுகளில் இந்திய விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என அறிவித்தார். ஆனால் அதற்கு எதிராக மத்திய அரசின் விலை நிர்ணய ஆணையம் நெல், பருத்தி, கம்பு, கேழ்வரகு, உளுந்து, பயறு, நிலக்கடலை உள்ளிட்ட விளை பொருட்களுக்கு ஆதார விலையை தவறாக கணக்கீட்டு மோசடியான விலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவினத்துடன் 50 சதவீதம் விலை நிர்ணயித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஒரளவு

நல்ல விலை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு நெல்லுக்கு ரூ.2340 என விலை நிர்ணயிக்காமல் குறைவாக அறிவித்திருப்பது மோசடியாகவே கருத வேண்டியுள்ளது. இவ்வாறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறினர். 

Next Story