அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் உண்ணாவிரதம்


அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 18 July 2018 10:00 PM GMT (Updated: 18 July 2018 7:41 PM GMT)

பணி நிரந்தரம் செய்ய கோரி அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் இணைந்து கோவையில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, 

அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம் ஆகியவை சார்பில் கோரிக்கை களை வலியுறுத்தி கோவை பவர் ஹவுசில் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன கோவை மண்டல தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

கோவை மண்டல பொதுச்செயலாளர் வில்லியம், அமைப்பு செயலாளர் மோகன்ராஜ், ஈரோடு மண்டல தலைவர் கலை முருகன், பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், திருப்பூர் மண்டல தலைவர் முத்துக்குமார், பொதுச்செயலாளர் துளசிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஓய்வு பெற்ற பணியாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் ராகவேந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட கண்டக்டர்கள், டிரைவர்கள் தற்போது வரை நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்போது அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கண்டக்டர் இல்லா பஸ்கள் இயக்கப்படுகின்றன.இது மோட்டார் வாகன சட்டத்தை கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்ட முடிவாகும். மேலும் பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே அரசும், நிர்வாகமும் கண்டக்டர் இல்லா பஸ் இயக்குவதை கைவிட வேண்டும். மேலும் அரசு பஸ்களுக்கு தேவையான உதிரி பா கங்களை உடனுக்குடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பல மாதங்களாக பழைய அகவிலைப்படி மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே 13-வது ஊதிய ஒப்பந்தபடி 125 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் பத்மநாபன், பெரியசாமி, சோமு, குணசேகரன், நடராஜ் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story