தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளத்தை தூர்வாரும் பணி தொடக்கம்
தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளத்தில் ரூ.60 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நேற்று தொடங்கி, நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளத்தில் ரூ.60 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நேற்று தொடங்கி, நடைபெற்று வருகிறது.
கோரம்பள்ளம் குளம்
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் செலவில் தூர்வாரப்படுகிறது. இந்த பணிக்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு என்.டி.பி.எல். நிறுவன தலைமை செயல் அலுவலர் ஷாஜிஜான் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர்(பயிற்சி) அனு, என்.டி.பி.எல். அனல்மின்நிலைய முதன்மை நிதி அலுவலர் ஜெயசிங் டேனியல், பொதுமேலாளர்(மனிதவளம்) ராஜமீனாட்சி, துணை பொது மேலாளர் ஜான்மோசஸ், ஜவகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
குளங்கள்
முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி ஊரணிகள், குளங்களில் இருந்து விவசாயிகள், விவசாயத்துக்கு வண்டல் மண் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் படி மாவட்டத்தில் 637 குளங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதுவரை 300 குளங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு மட்டும் 3 லட்சம் கன மீட்டர் மண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரத்து 872 விவசாயிகள் பயன்பெற்று உள்ளனர்.
மழைக்கு முன்பு...
இது தவிர பெரிய குளங்களை மற்ற நிறுவனங்கள் மூலம் தூர்வாரும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோரம்பள்ளம் குளம் 2 ஆயிரத்து 108 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தை என்.டி.பி.எல். அனல்மிநிலைய நிறுவனம் தூர்வாரும் பணியை மேற்கொண்டு உள்ளது. 1 லட்சம் கன மீட்டர் மண் எடுக்கப்படுகிறது. அதன் பிறகு கரை பலப்படுத்தப்பட உள்ளது. இதனால் மழைநீர் தேக்கி வைப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.
இதே போன்று பல்வேறு பெரிய குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு அனைத்து குளங்களையும் தூர்வாரி ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் அனைத்து மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் மூலம் 60 கிலோ மீட்டர் தூரம் சுத்தம் செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். தொடர்ந்து குளத்தை தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
Related Tags :
Next Story