வாலாஜாபாத் அருகே ரூ.5 லட்சம் இரும்பு பொருட்கள் திருட்டு; 3 பேர் கைது


வாலாஜாபாத் அருகே ரூ.5 லட்சம் இரும்பு பொருட்கள் திருட்டு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 July 2018 10:45 PM GMT (Updated: 18 July 2018 7:45 PM GMT)

வாலாஜாபாத் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள திருவங்கரணை கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் அந்த தனியார் நிறுவன உரிமையாளர் திடீரென இறந்து விட்டார். இதனால் மின்உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டது.

அங்கு கட்டுமானப்பணிக்காக ஏராளமான இரும்பு பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்த இரும்பு பொருட்களை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிலர் அவ்வப்போது திருடி வந்துள்ளனர். இதுகுறித்து தனியார் நிறுவனம் சார்பில் புகார் தெரிவிக்கப்படாததால் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.


இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிலர் நேற்று தனியார் நிறுவனத்தில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி மினி லாரியில் ஏற்றிச்செல்ல முயன்றனர். இதுகுறித்து திருவங்கரணை கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இரும்பு பொருட்களை திருடிய திருவள்ளூர் மாவட்டம் திருபாத்தியூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 34), திருவங்கரணையை சேர்ந்த மணிகண்டன் (34), நேதாஜி (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களையும், மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story