கோவை மாவட்டத்தில் தொடர் மழை: நிலத்தடி நீர்மட்டம் 16 அடி உயர்ந்தது
தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 16 அடி உயர்ந்துள்ளது.
கோவை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் பெய்ய தொடங்கியது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் எதிர்பார்த்ததை விட பருவமழை அதிக அளவில் பெய்துள்ளது. இதன் காரணமாக கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன.
கோவை குளங்களின் நீர்ஆதாரமான நொய்யலிலும் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது. கோவையில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கோவை குளங்களில் நீர்நிரம்பி இருப்பதால் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நீர் தொழில்நுட்பம் மையம் சார்பில் சர்க்கார் சாமக்குளம், பொள்ளாச்சி, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 10 அடி முதல் 16 அடி வரை உயர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நீர் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் குளங்களுக்கு நீர்வரத்து குறைந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலத்தடி நீர் மட்டம் முதன் முறையாக 16 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்துக்கு ஏற்கனவே 444 மி.மீட்டர் மழை கிடைத்துள்ளது. தென்மேற்கு பருவமழை இன்னும் 2 மாதங்கள் பெய்ய வேண்டியுள்ளது. எனவே கோவை மாவட்டம் மேலும் அதிக அளவில் மழை பெறும்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதால் அவற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர் குளம், குட்டைகளுக்கு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோவையின் சில பகுதிகளில் பாறைகள் நிறைந்திருக்கும். எனவே எந்தெந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்ற விவரங்களை பொதுப்பணித்துறையினரும் சேகரித்து வருகிறார்கள்.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கோவையின் புறநகர் பகுதிகளில் கோடைக்காலங்களிலும் விவசாயம் தடைபடாமல் நடைபெற வாய்ப்புள்ளது. கோவை நகருக்குள் உள்ள உக்கடம் குளம், குறிச்சி குளம், வாலாங்குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கோவை நகருக்குள் உள்ள ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகளில் தடையின்றி நீர் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story