கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் எச்.எம்.எஸ். தொழிற்சங்கம் கோரிக்கை


கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் எச்.எம்.எஸ். தொழிற்சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 19 July 2018 3:30 AM IST (Updated: 19 July 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு கண்காணிப்புகுழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு எச்.எம்.எஸ். தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை, 


கோவை மண்டல கட்டுமான தொழிலாளர் எச்.எம்.எஸ். சங்க பொதுக்குழு கூட்டம் சிங்காநல்லூரில் உள்ள தியாகி என்.ஜி.ஆர். மகாலில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் பி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

சங்க கவுரவ தலைவரும், மாநில எச்.எம்.எஸ். செயலாளருமான டி.எஸ்.ராஜாமணி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜி.மனோகரன், வரவேற்றார். சங்க பொருளாளர் பழனிசாமி தீர்மானங்களை முன்மொழிந்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பதவி பல மாதங்களாக நிரந்தர அலுவலர் இல்லாமல் உள்ளது. இதனால் நலவாரிய பதிவு புதுப்பித்தல் போன்ற பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே தொழிலாளர் உதவி ஆணையாளர் நியமிக்கப்பட வேண்டும்.

60 வயது முடித்த பின்னர் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து விசாரணை முடிந்த பின்னரும் இதுவரை கோவை அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே உடனடியாக அந்த பட்டியல் வெளியிட்டு அவர்களுக்கு விண்ணப்பித்த தேதியில் இருந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் கோரும் விண்ணப்பங்களில் வயது உள்ளிட்ட சில பிரச்சினைகள் காரணமாக கண்காணிப்பு குழுவின் ஒப்புதலுக்காக 400 விண்ணப்பங்கள் காத்திருக்கின்றன. இந்த விண்ணப்பங்கள் மீது உடனே தீர்வு காணும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்தி ஒப்புதல் வழங்கவேண்டும்.

மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் குடும்ப ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு முழுமையாக சமூக பாதுகாப்பு கிடைத்திட இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, போனஸ் வேலையில்லாத கால நிவாரணம் போன்றவற்றையும் அமலாக்க வேண்டும்.

கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அகில இந்திய அளவில் வலுவான தேசிய பாதுகாப்பு நிதியத்தை உருவாக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். கட்டுமான வாரிய உறுப்பினர் பதிவிற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். 50 வயது முடிவடைந்த பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story