திருவள்ளூர் அருகே சவுடு மண் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்


திருவள்ளூர் அருகே சவுடு மண் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 July 2018 11:00 PM GMT (Updated: 18 July 2018 8:04 PM GMT)

திருவள்ளூர் அருகே சவுடு மண் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பட்டரை பெரும்புதூர் கிராமத்தில் பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான ஏரியில் அரசு அனுமதி பெற்று சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது.

இந்த சவுடு மண் குவாரியில் இருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் சவுடு மண் ஏற்றிக்கொண்டு திருவள்ளூர், பூந்தமல்லி, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் மற்றும் சென்னை என பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அவ்வாறு செல்லும் மண் லாரிகள் அரசு விதிமுறைகளை மீறி நிர்ணயித்த அளவை விட அளவுக்கு அதிகமான சவுடு மண் ஏற்றிக்கொண்டு செல்கிறது.

மேலும் அந்த ஏரியில் நிர்ணயித்ததை விட அதிக ஆழத்தில் சவுடு மண் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. அந்த லாரிகள் அதிக வேகமாகவும் செல்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பட்டரைபெரும்புதூர் பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் அந்த வழியாக சவுடு மண் எடுத்து வந்த 10-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து அதன் முன்பு அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



Next Story